சமூக வலைத்தளங்கள் மக்களுக்கு சரியான கருத்துக்களை எடுத்துச் செல்ல வேண்டும் – செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டு!

சமூக வலைத்தளங்கள் மக்களுக்கு சரியான கருத்துக்களை மட்டுமன்றி முன்மாதிரியான வழிகாட்டக் கூடியதான செயற்பாடுகளையும் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற விஷேட கலந்துரையாடலை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே குறித்த விடயத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
சமூக வலைத்தளங்களூடாக சிலர் தவறான விடயங்களை வெளியிட்டு தாமும் குழம்பி மக்களையும் குழப்பி வருகின்றார்கள். இதனால் பாதிக்கப் பட்டவர்களாக அப்பாவி மக்களே காணப்படுகின்றனர்.
எனவேதான் சமூக வலைத்தளங்கள் மட்டுமன்றி தமிழ் ஊடகங்களும் மக்களுக்கு சரியான வழிகளைக் காட்டும் நெறிமுறையில் செயற்படவேண்டும்.
கடந்தகாலங்களில் என்மீதும் என் கட்சி மீதும் அவதூறுகளையும் குற்றச்சாட்டுக்களையும் திட்டமிட்ட வகையில் முன்னெடுத்து எமக்கு களங்கம் ஏற்படுத்தும் செயற்பாடுகளை மக்களிடம் கொண்டுசென்றனர்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களும் அவதூறுகளும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுடன் கூடியதான உள்நோக்கம் கொண்டதாகவே அவதானிக்க முடிகின்றது.
ஆனால் தற்போது எமது கட்சி மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உண்மை நிலைவரங்கள் நீதிமன்ற விசாரணைகளினூடாக தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அதனடிப்படையில் தான் எமது கட்சி மீது சேறுபூசிய உதயன் பத்திரிகை நிறுவனம் வெளிட்ட செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்பதை அண்மையில் வெளியிடப்பட்ட யாழ் நீதிமன்ற தீர்ப்பு மக்களுக்கு உண்மை நிலைமைகளை தெரியப்படுத்தியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|