வடக்கு மாகாணத்தில் தென்னை ஆராய்ச்சி நிலையமொன்று அமைக்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!

Friday, November 24th, 2017

எமது நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் தேங்காயின் விலை அதிகரித்து காணப்படும் நிலையில், தற்போது ஒரு தேங்காய் 110 ரூபாவிற்கும், சில பகுதிகளில் அதைவிட அதிக விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், தெங்கு உற்பத்தித் திணைக்களம், நாட்டில் குறிப்பிட்ட சில பகுதிகளில் 65 ரூபாவுக்கு தேங்காயை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது. தற்போது அந்தப் பணி கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

எனினும், நாட்டில் அனைத்து மக்களும் நியாயமான விலையில் தொடர்ந்து தேங்காய்களைப் பெற்றுக் கொள்வதற்கு இது ஒரு நிலையானதும், நடைமுறைச் சாத்தியமானதுமான ஏற்பாடு அல்ல. எனவே, தேங்காய் உற்பத்தியை நாட்டில் அதிகரிக்க வேண்டியதும், தற்போதுள்ள தென்னங் காணிகளை பாதுகாத்து, பராமரித்து, மேம்படுத்துவதும் அவசியமாகும் – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் காணி, நாடாளுமன்ற அலுவல்கள், பெருந்தோட்டக் கைத்தொழில், வலுவாதார மற்றும் வனஜீவராசிகள் ஆகிய அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு, உரையாற்று கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

யாழ் குடாநாட்டைப் பொறுத்தவரையில் 1995ஆம் ஆண்டு காலத்தில் தென்னை மிகவும் செழிப்பாக வளர்ந்திருந்த சுமார் 4,624 ஏக்கர் தென்னங் காணிகள், கடந்த கால யுத்தம் காரணமாக பாதுகாப்பு வலையங்களாகவும், தரிசு நிலங்களாக கைவிடப்பட்டும், பற்றைக் காடுகளாக இருக்கும் நிலை காணப்படுவதாகத் தெரிய வருகின்றது.

அதே நேரம், கிளிநொச்சி மாவட்டத்தில், பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கீழள்ள முக்கொம்பன், சின்னப் பல்லவராயன்கட்டு கிராமத்தில் மிகவும் செழிப்பாக வளர்ந்திருந்த தென்னை மரங்களைக் கொண்ட சுமார் 125 ஏக்கர் பண்ணைக் காணி, உரிய பராமரிப்புகள் மற்றும் பாதுகாப்பு வேலிகள் இன்மை காரணமாக அழிந்துவிடும் நிலையிலுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

அந்த வகையில், யாழ் குடாநாடு அடங்களாக வடக்கு மாகாணத்தில் தென்னை பயிர்ச் செய்கை தொடர்பில் காணப்படுகின்ற பிரச்சினைகள் மற்றும் தேவைகள் இனங்காணப்பட்டுள்ள நிலையில்,

யாழ் குடாநாட்டில் தற்போது கைவிடப்பட்டுள்ள மேற்படி தென்னங் காணிகளில் விடுவிக்கப்பட வேண்டிய காணிகளை விடுவித்தும், விடுவிக்கப்பட்டுள்ள காணிகளைத் துப்பரவு செய்தும், நீண்ட கால பயிர்ச் செய்கைப் பாவனையிலிருந்து, பின் நீண்ட காலமாக பாவனையில் இல்லாதிருந்தால் அந்த மண்ணின் மலட்டுத் தன்மையைப் போக்கி, வளப்படுத்தி, மீள் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்வதற்கும், தற்போது காணப்படுகின்ற தென்னை மரங்களை உரிய பராமரிப்பிற்கு உட்படுத்துவதற்கும,;

மேலும், யாழ்ப்பாணம் தீவகப் பகுதிகளில் சுமார் 5 இலட்சம் வரையிலான தென்னைகளை நடுவதற்குரிய சாத்தியங்கள் இருப்பதாலும், வடக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளிலும் தென்னை வளர்ப்பிற்கான சாத்தியங்கள் இருப்பதாலும், இப்பகுதிகளில் பண்ணைகள் அடிப்படையிலும், குறுகிய காலத்தில் பயன்களைத் தரக்கூடிய கன்றுகளைக் கொண்டும் தென்னைப் பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கும்,

கிளிநொச்சி, முக்கொம்பன், சின்னப் பல்லவராயன்கட்டு தென்னம் பண்ணையை பாதுகாத்து, பராமரிப்பதற்கும், யுத்த காலகட்டத்தில் தனியாருக்குரிய தென்னங் காணிகளில் அமைக்கப்பட்ட மண் அணைகளை அகற்றி, துப்பரவு செய்து கொள்வதற்கு பொருளாதார ரீதியில் வசதிகளற்றவர்களுக்கு அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும்,

தென்னை பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றவர்கள் முகங்கொடுத்து வருகின்ற கட்டாக்காளி கால்நடைகளின் பிரச்சினைக்கென வேலிகளை அமைப்பதற்கும், காட்டு யானைகளிடமிருந்து பயிர்களைக் காப்பதற்கு ஏதுவான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும்,

முல்லைத்தீவு, செம்மலை, பகுதியில் ஏற்கனவே தென்னை பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்த சுமார் 700 ஏக்கர் நிலம் தற்போது வனவள இலாக்காவினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை மக்களின் பாவனைக்கு, தென்னை செய்கைக்காகப் பெற்றுக் கொடுப்பதற்கும்,

புலம்பெயர் மக்களுக்குச் சொந்தமான தென்னங் காணிகள் உரிய பராமரிப்பு இன்றி பல வருட காலமாக இருப்பதால், அவற்றின் அயலிலுள்ள ஏனைய காணிகளில் காணப்படுகின்ற தென்னை மரங்கள் பல்வேறு நோய்த் தாக்கங்களுக்கு உட்படுகின்ற காரணத்தினால், இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கும்,

குறுகிய காலத்தில் பயன் தரக்கூடிய தென்னங் கன்றுகளை ஒரு குடும்பத்துக்கு இரண்டு வீதமாக வீட்டுத் தோட்டச் செய்கைகளுக்காக வழங்குவதற்கும்,

தென்னை ஆராய்ச்சி நிலையமொன்றை வடக்கு மாகாணத்தில் அமைப்பதற்கும், தென்னை பயிர்ச் செய்கை தொடர்பில் வலுவான ஈடுபாடுகளை எமது மக்கள் மத்தியில் கட்டியெழுப்பும் நோக்கில் பரந்தளவில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கும்,

வடக்கு மாகாணத்தில் மண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பெருந்தோட்டத்துறை சார்ந்த மேலும் பயிரினங்களை – குறிப்பாக மரமுந்திரி போன்றவை – பயிரிடுவதற்கும் கௌரவ பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

Untitled-4 copy

Related posts:

அரச தொழில்வாய்ப்புகளில் - எத்துறைகளாக இருந்தாலும் இனவிகிதாசாரம் பேணப்படுதல் வேண்டும் - மன்றில் டக்ளஸ...
சுயநலம் கொண்ட காணாமல் போனோர் சங்கம் வேண்டாம் - பரிகாரம் பெற்று தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்த...
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பதவிகளையும் தாண்டிய பொறுப்புக்களையும் சுமக்க வேண்டும் - அமைச்சர் டக்...