சமஷ்டி ஒளிந்திருப்பதாக கூறுவது இருட்டு அறைக்குள் கறுப்பு பூனையை தேடும் முயற்சியாகும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, February 21st, 2019

இந்த நாடு சுதந்திரமடைந்த காலகட்டத்தில் இந்த நாட்டின் தனிநபர் வருமானமானது ஜப்பானுக்கு அடுத்த நிலையில் காணப்பட்டது. அக்காலகட்டத்தில் பொருளாதார ரீதியில் இலங்கைக்கு பின்னாலிருந்த தாய்வான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, மாலைத்தீவுகள் போன்ற நாடுகள் 80களிலேயே இலங்கையின் பொருளாதார வளர்ச்சியினையும் மீறிய உயர் நிலைக்குச் சென்றுவிட்டது.

இந்தியா, இந்தோனேசியா, வியட்நாம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் கைத்தொழில் துறையில் அதே காலகட்டத்தில் எம்மைவிட வளர்ச்சி நிலையினை அடைந்தன.

ஆசியாவிலேயே வறுமையான நாடாக அன்று இனங்காணப்பட்ட பங்களாதேஷ் கூட இன்று கைத்தொழில் மற்றும் பொருளாதார ரீதியில் மிகுந்த வளர்ச்சியை எட்டி நிற்கின்றது. இத்தகைய நிலையில் இந்த நாடு எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்து சிந்தித்துப் பாருங்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றில் நடைபெற்ற ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான இரண்டு கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்த நாடு சுதந்திரமடைந்த நிலையில், தேயிலை, இறப்பர், தெங்கு அடிப்படையிலான ஏற்றுமதி பொருளாதாரம் இருந்தது. நெல் மற்றும் உணவுப் பயிர் உற்பத்தி அடிப்படையிலான அண்டியதான விவசாய பொருளாதாரம் இருந்தது. இன்று அவற்றின் நிலை என்னவென்றெ தெரியாமல் இருக்கின்றது.

போதைப் பொருள் வியாபாரிகள் – கடத்தல்காரர்கள் ஏற்றுமதியாகியும், போதைப் பொருட்கள் இறக்குமதியாகியும் கொண்டிருக்கின்ற நிலையே நாட்டில் இன்று தோன்றியிருக்கின்றது.

2019 – 2023 காலகட்டத்துக்குள் செலுத்தப்பட வேண்டிய சர்வதேச கடன்களின் அதிகரிப்பு காணப்படுகின்றது. அந்நிய செலாவணியை ஈட்டிக் கொள்ளத்தக்க மாற்று வழிகளை நீங்கள் ஆராய்வதாக இல்லை.

ஏற்றுமதிக்குரிய வெளிநாட்டு சந்தைவாய்ப்புக்களின் விரிவாக்கங்கள் தொடர்பில் போதிய அவதானங்கள் இல்லை. இதனிடையே மீள் ஏற்றுமதி செய்யப்போய் எமது நாட்டு மிளகுக்கும் கருங்காவுக்கும் (கொட்டப்பாக்கு) தற்போது சர்வதேச சந்தையில் பெறுமதி குறைந்துள்ளது.

சுங்கத் திணைக்களத்தில் பணிப் பகிஸ்கரிப்பு இடம்பெற்றபோது தான் இந்த மீள் ஏற்றுமதி தொடர்பிலான முறைகேடுகள் எமது மக்களுக்குத் தெரிய வருகின்றன.

இந்த நாட்டில் ஏற்றுமதிப் பயிர்களுக்கு என்ன குறை இருக்கின்றது? தேயிலை, இறப்பர், மிளகு, கருவா, பனை, கித்துள், தெங்கு, சாதிக்காய், ஏலம், கராம்பு என இந்த நாட்டில் எத்தனையோ பயிர்கள் மிக செழிப்பாக வளர்கின்றன. ஏன் அவற்றை உரிய முறையில் ஊக்குவித்து வளர்த்து, முடிவுப் பொருட்களாக்கி அதிகளவில் ஏற்றுமதி செய்ய முடியாது  எனக் கேட்க விரும்புகின்றேன்.

இன்னும், தற்போதைய நவீன சந்தைக் கேள்விகளுக்கு ஏற்ற பயிர்களை விளைவிக்க முடியும், கைத்தொழில்கள் மற்றும் சேவைகளை ஊக்குவிக்க முடியும்.

இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, ‘அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார்?’ என்றும், ‘புதிய அரசியல் யாப்புக்குள் சமஸ்ரி எங்கே ஒளிந்திருக்கிறதென்றும்’ வாத, விவாதங்களை நடத்திக் கொண்டு, இப்படியே காலத்தை ஓட்டிக் கொண்டிருப்போமேயானால், இந்த நாடு ஒருபோதும் முன்னேறப் போவதில்லை என்பதை வலியுறுத்துகின்றேன்.

Related posts:


காணிகள் பகிர்ந்தளிக்கப்படும்போது கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை - அமைச்சர் டக்ளஸ...
தமது பூரவீக காணிகள் விடுவிக்கப்படுவதை விரைவுபடுத்துமாறு மயிலிட்டி மீள்குடியேற்றச் சங்கத்தின் பிரதிநி...
குறுகிய சுயலாப அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்படும் கால இழுத்தடிப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாத...