கல்வித் துறை தனியார் மயப்படுத்தலை நோக்கி நகர்கின்றதா – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Saturday, November 19th, 2016

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகள் சார்ந்து பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதையிட்டு வரவேற்கின்றபோதும் கடந்த ஆண்டு கல்வித்துறை சார்ந்து ஒதுக்கப்பட்டிருந்த நிதியைவிட குறைந்தளவு நிதியே இம்முறை ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் நாடாளுமன்றில் புதிய ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

இசெட் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் அனுமதி பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவர்களில் 15000 பேருக்கு பாடநெறிக் கட்டணத்தில் 8, லட்சம் ரூபா கடன் வழங்கப்படும் என்ற சலுகையையும் பார்க்கின்றபோது கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகள் தனியார் மயப்படுத்தலை நோக்கி நகர்கின்றதா என்ற கேள்வி எமது மக்கள் மத்தியில் இருந்து எழுகிறது என்றும்’ சுட்டிக்காட்டினார்.

மேலும் நாட்டில் முன்பள்ளிகளையும் அறநெறி பாடசாலைகளையும் மேலும் சிறப்பாக முன்னெடுக்கும் நோக்கில் அவற்றில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு போதியளவு ஊதிய தொகையொன்றினை மாதாந்தம் வழங்கக் கூடியதான கொள்கைத் திட்டமொன்று வகுக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்பதையும் நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

யாழ்ப்பாணம், கராப்பிட்டிய மற்றும் அம்பாறை மருத்துவ மனைகளில் விஷேட சிறுவர் பராமரிப்பு நிலையங்களை அமைத்தல் மற்றும் தாதியர் பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்தல்மருத்துவமனைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் போன்றவை தொடர்பில் இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

பட்டதாரிகள் தொழிற் துறைகளை ஆரம்பிக்க 1.5 மில்லியன் ரூபா வீதம் வட்டியற்ற கடன் வழங்குவதற்கென 150 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நமது நாட்டைப் பொறுத்த வரையில் வேலையற்ற  பட்டதாரிகள் பலர் காணப்படும் நிலையில் இத் திட்டம் ஓரளவுக்கு பயனளிக்கும் என நம்புகின்றேன்.

அதே நேரம் இதற்கென அதிக நிதி ஒதுக்கப்பட்டு இத்திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படல் வேண்டும். கடந்த கால அசாதாரண சூழ்நிலை காரணமாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வேலையற்ற பட்டதாரிகளின் தொகை அதிகரித்திருப்பதையும் இங்கு அவதானத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

03

Related posts: