கடற்றொழிலாளர்களுக்கு காப்புறுதியும் கடற்றொழில்சார் உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் ஏற்படுத்தப்படும் – வரவு செலவுத் திட்ட உரையில் அமைச்சர் டக்ளஸ் விபரிப்பு !

Friday, November 27th, 2020

.

பருத்தித்துறை, குருநகர், பேசாலை, வாழைச்சேனை உட்பட நாட்டின் அனைத்து பாகங்களிலும் சகல வசதிகளும் கொண்ட மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டகள்ஸ் தேவானந்தா, கடற்றொழில் செயற்பாடுகளை விஸ்தரிக்கும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவுள்ளதுடன் கடற்றொழிலாளர்களுக்கு காப்புறுதி மற்றும் ஓய்வூதியத் திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று(27.11.2020) நடைபெற்ற கடற்றொழில் அமைச்சு தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உiராயாற்றிய கடற்றொழில் அமைச்சர், கொவிட் 19 காரணமாக கடற்றொழில்சார் செயற்பாடுகள் சந்தித்துள்ள பின்னடைவுகளில் இருந்து மீள்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்தியதுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் பிரதமர் மஹிந்ந ராஜபக்ஷவின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்படும், நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு என்கின்ற வேலைத்திட்டத்தின் அடிப்படையில் கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்களையும் தெளிவுபடுத்தினார்.

குறிப்பாக, கந்தர, வெல்லமன்கர, பலப்பிட்டிய, ஹிக்கடுவ, அம்பலங்கொட, காலி, மிரிஸ்ஸ, நிலாவெளி, அம்பாந்தோட்டை, சுதுவெல்ல, தொடந்தூவ, மயிலிட்டி, வாழைச்சேனை போன்ற இடங்களில் சகல உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மீன்பிடித் துறைமுகங்களை திட்டமிட்டுள்ளதுடன் பருத்தித்துறை, குருநகர், பேசாலை மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் ஒலுவில் துறைமுகத்தை மீன்பிடித் துறைமுகமாக மாற்றியமைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், ‘வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆழ்கடல் கடற்றொழிலை பரவலாக மேற்கொள்ளத்தக்க வகையில் பயிற்சிகளை வழங்கி, அதற்குரிய படகுகள், கருவிகள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுக்கவுள்ளோம்.

அதேபோன்று, நன்னீர் வேளாண்மையை தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் சூழலுக்கு தீங்கு ஏற்படாத வகையில் விரிவுபடுத்துவதும், அதனை மனைப் பொருளாதாரமாக அதாவது, வீட்டுத் தோட்டச் செய்கையாகவும் மேற்கொள்வதே அமைச்சின் இலக்காகும். குறித்த இலக்கை அடைவதற்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடற்றொழிலாளர்களுக்கான காப்புறுதி முறைமையொன்றை அறிமுகஞ் செய்தல், கடல்சார் பல்கலைக்கழகத்தைப் பயன்படுத்தி இளைஞர், யுவதிகளுக்கென கடற்றொழில் தொடர்பிலான தொழில் நுட்ப மற்றும் முகாமைத்துவப் பயிற்சி நெறிகளை செயற்படுத்தல்,  கடற்றொழில் சார்ந்த மகளிர் சங்கங்களை வலுப்படுத்தல், செயற்பாடுகளை இழந்துள்ள கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்தல், ‘கடற்றொழில் ஊக்குவிப்பு’ (தீவர திரிய) கடன் திட்டத்திற்கு பங்களிப்பாற்றுவதன் மூலமாக கடற்றொழில் சார்ந்த உதவித் திட்டங்கள், கடற்றொழிலாளர்களுக்கான  ஓய்வூதியங்களை வழங்கும் வகையிலான முறைமையை செயற்படுத்தல் போன்ற செயற்பாடுகளையும் முன்னெடுக்கவுள்ளோம்.

கடலிலும் உள்ளூர் நீர் நிலைகளிலும் சட்டவிரோத மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றவர்களை அதிலிருந்து தவிர்த்துக் கொள்ளும் நோக்கில், கடற்றொழில் நடவடிக்கைகள் தொடர்பில் ஒழுங்குவிதிகள் வகுக்கப்பட்டு வருகின்றன.

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டி செயற்பாடுகள் காரணமாக எமது கடற்றொழிலாளர்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதுடன் எமது கடல் வளங்களும் பாதிப்படைந்து வருகின்றன. எனவே குறித்த பிரச்சினையை தொடர்பான கலந்துரையாடல்களை தொடர்ந்தும் முன்னெடுத்து நிரந்தர தீர்வொன்றினை பெற்றுக் கொள்ளவதற்கும் எதிர்பார்த்துள்ளோம்.’ என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புகளைக் கேட்பது என்பது எமது இன உரிமையை அடகு வைப்பதல்ல - நாடாளுமன்ற...
காலஞ்சென்ற இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சருக்கு நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. அஞ்சலிமரியாதை!
“டூனா” மீனுக்கு நிர்ணய விலை - முறையான கொள்கைத் திட்டம் அவசியம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பலநா...

கீரிமலை வலித்தூண்டல்றோ.க.த.க.பாடசாலையின் செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் ...
ஊர்காவற்துறையில் கடலுணவு வியாபாரத்தில் நீண்ட காலமாக நிலவிய பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவி...
வெளிச்சமான பயணத்தில் மீண்டும் இருளுக்கு வித்திடுவது அவரவர் தத்தமக்கே கரி பூசிக் கொள்வது போன்றது –...