எமது மக்கள் முழுமையான சுதந்திரம்பெற தமிழ்த் தலைமைகள் நியாயமாக உழைக்கவில்லை- டக்ளஸ் தேவானந்தா அவர்களது சுதந்திர தினச் செய்தி!

Sunday, February 4th, 2018
இன்று எமது நாடு சுதந்திரம் பெற்று 70வது வருடத்தினைக் கொண்டாடி வருகின்ற நிலையில், எமது மக்கள் முழுமையான சுதந்திரத்தைப் பெறாததற்கு, எமது மக்களை வாக்குகளை அபகரித்துக்கொண்ட தமிழ்த் தலைமைகள் எமது மக்களுக்கென நியாயமாக உழைக்காமல், சுயநலமாக செயற்பட்டமையே காரணம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு முந்தைய சிங்கள அரசுகளின் மாற்றாந்தாய் மனப்பான்மை காரணமாக எமது பிரதேசங்கள் அபிவிருத்தியில் கைவிடப்பட்டிருந்தன. கடந்த கால யுத்தம் மற்றும் பாரிய இயற்கை அனர்த்தங்கள் மேலும் எமது மக்களையும், எமது பகுதிகளையும் பெருவாரியாகப் பாதித்துவிட்டன. இத்தகைய பாதிப்புகளிலிருந்து எமது மக்கள் மீள எழ முயற்சிக்கின்ற சந்தர்ப்பங்களில் காலநிலை மாற்றங்கள் காரணமாகவும், சுயலாப தமிழ்த் தலைமைகளின் அலட்சியப் போக்குகள் காரணமாகவும் எமது மக்களின் பிரதான வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
வேலைவாய்ப்பின்மை, வாழ்வாதாரங்களின்மை போன்ற காரணிகள் எமது பகுதிகளை வறுமையை நோக்கித் தள்ளிவிட்டுள்ளன. எமது மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதற்கான உரிய வேலைத் திட்டங்கள் மாகாண சபையினால் முன்னெடுக்கப்படாத நிலையில், மத்திய அரசிலிருந்து வரும் வேலைத் திட்டங்களும் புறக்கணிக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் வடக்கு நோக்கி வந்திருந்த சுமார் 40க்கும் மேற்பட்ட கைத்தொழில் முயற்சிகள் வடக்கு மாகாண சபையின் ஆளுமை, அக்கறையின்மை காரணமாக வெளி மாவட்டங்களுக்குச் சென்று விட்டன.
பொருளாதார ரீதியில் மட்டுமின்றி ஏனைய அனைத்துத் துறைகள் சார்ந்தும் எமது மக்கள் இன்னும் பின்தள்ளப்பட்டே வருகின்றனர். அரச வேலைவாய்ப்புகளில் இதே நிலைமை தொடர்கின்றது. மொழி ரீதியிலான சுதந்திரம் எமது மக்களுக்கு இன்னும் முழுமையாக இல்லை. எமது மக்களின் காணி, நிலங்கள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. மேலும், எமது மக்களின் காணி, நிலங்கள் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு அபகரிக்கப்பட்டு வருகின்றன. திட்டமிட்ட குடியேற்றங்கள் இடம்பறுகின்றன. எமது மக்களின் கடல் வளங்கள் இந்திய கடற்றொழிலாளர்களினால் எல்லைதாண்டியும், தென் பகுதி கடற்றொழிலாளர்களால் சட்டவிரோத முறையிலும் சுரண்டப்படுகின்றன. முன்பில்லாத அளவில் காட்டு யானைகளின் தொல்லைகள் எமது மக்கள்மீது திணிக்கப்பட்டுள்ளன. காணாமற்போனோர் தொடர்பில் வெறும் கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றனவே அன்றி, இன்னமும் எவ்விதமான தீர்வுகளும் இல்லை. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை இன்னும் எட்டாக் கனியாகவே இருக்கின்றது. இத்தகைய பிரச்சினைகள் அனைத்தையும் இந்த அரசுடன் இணக்க அரசியல் நடத்துகின்ற தமிழ்த் தலைமைகள், இந்த அரசைக் கொண்டு தீர்த்திருக்க வேண்டும்.
கடந்த காலங்களில், எமது மக்களை பல்வேறு பாதிப்புகளிலிருந்தும் மீட்டெடுக்கும் வகையில் நாம் தொடர்ந்தும் அயராது உழைத்துள்ளோம். இவ்வாறு நாம் முன்னெடுத்திருந்த பணிகள் யாவும் கடந்த இரண்டு வருடங்களில் தொடரப்படாமல், எமது மக்களுக்கும், எமது பகுதிகளுக்கும் பாரிய பின்னடைவுகளே ஏற்பட்டுள்ளன.
எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்கான தீர்வு தொடர்பில் தெளிவான ஏற்பாடுகள் இல்லாத நிலை காணப்படுகின்றது. ஐக்கிய இலங்கைக்குள் சமாதானமான சகவாழ்வு என்பதையே நாம் வலியுறுத்தி வருகின்றோம். அது, மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சியாக அமைய வேண்டும். இங்கு ‘ஒற்றையாட்சி – ஒருமித்த நாடு – சமஸ்டி வரும், ஆனால், சமஸ்டி என இருக்காது’ என்றெல்லாம் சொல் சித்து விளையாட்டுகள் இருக்கக்கூடாது. இப்படியான சித்து விளையாட்டுகளால் இனியும் எமது மக்களை ஏமாற்றிவிடலாம் என எவரும் கனவு காணக்கூடாது.
13வது திருத்தச் சட்டத்தைவிட அதிகளவிலான அதிகாரங்களைக் கொண்ட புதிய அரசியல் யாப்பினைக் கொண்டு வந்தால் அதனை நாம் வரவேற்போம். அல்லாதுவிடில் அதனை நாம் நிச்சயமாக எதிர்ப்போம். அந்தவகையில், இந்தப் புதிய அரசியல் யாப்பு எப்போது வரும் என்று கூற முடியாது. ‘பாதி முடிந்துவிட்டது, மீதி முடியப் போகின்றது’ என தேர்தலில் வாக்குகளை அபகரிப்பதற்காக எவரும் எதையும் கூறலாம். அவை உண்மையாகிவிட முடியாது.
எனவே, தற்போது அரசியல் யாப்பில் உள்ளதும், நாட்டில் நடைமுறையில் உள்ளதுமான 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்து எமக்கான அரசியல் தீர்வுத் திட்டத்தை ஆரம்பிக்குமாறும், பின்னரான காலகட்டங்களில் படிப்படியாக அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து, இறுதி இலக்கினை நோக்கி நகர்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் நாம் கேட்டுக் கொள்கின்றோம்.
இன்றைய சுதந்திர தினமானது எமது மக்களைப் பொறுத்தவரையில் எமது மக்களின் அனைத்துத் துறைகள் சார்ந்த சுதந்திரத்திற்கும் குரல் கொடுக்கின்ற ஒரு தினமாகவே கொள்ள வேண்டியுள்ளது. இதிலிருந்து எமது மக்களின் அனைத்துத் துறைகள் சார்ந்த சுதந்திரத்திற்குமாக, ஏமாற்றுத் தமிழ்த் தலைமைகளைப் புறக்கணித்து, நாம் தொடர்ந்தும் அயராது உழைப்போம் என டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: