எமது இனத்தை அவலங்களிலிருந்து மீட்டு சரியான இலக்கை நோக்கி வழிநடத்திச் செல்ல என்னால் முடியும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Wednesday, June 27th, 2018

எமது இளைஞர்களுக்கு சமூக ரீதியாகவோ அன்றி அரசியல் ரீதியாகவோ சரியான வழியைக் காட்ட இளைஞர் அமைப்புகள் முன்வரவேண்டும். அவ்வாறு சரியான பங்களிப்பு இருக்குமாக இருந்தால் நிச்சயமாக எமது இனத்தை அவலங்களிலிருந்தும் துயரங்களிலிருந்தும் மீட்டு சரியான இலக்கை நோக்கி வழிநடத்திச் செல்ல என்னால் முடியும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கோப்பாய் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் வருடாந்த விளையாட்டு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் –

இளைஞர்களுக்கு நல்வழி காட்டும் போர்வையில் அவர்களுக்கு உணர்ச்சிகளை ஊட்டுவதனூடாகவும் சுயலாபங்களுக்காக அவர்களை தவறாக வழிநடத்துவதாலுமே எமது சமூகம் சீரழிந்துகொண்டு போகின்றது. இது நிச்சயம் எமது இனத்தை மீண்டுமொரு அழிவுக்கே கொண்டுசெல்ல வழிவகுக்கும்.

அத்தகைய தவறான போக்கில் எமது இளைஞர்களை செல்லவிடாது சரியான வழிநோக்கி வழிநடத்திச் செல்ல இத்தகைய கழகங்கள் முன்னின்று உழைக்கவேண்டும்.

கடந்த காலங்களிலும் சரி இன்றும் சரி நாம் எமது இனத்தின் பண்பாடுகளையும் பாரம்பரியங்களையும் சிதைவடைந்துவிடாது பாதுகாப்பதிலும் எமது இளம் சமூகத்தினரது ஆற்றல்களை ஊக்குவித்து அவர்களை ஒளிமயமான ஒரு நிலைக்கு கொண்டு செல்வதற்காகவும் அயராது உழைத்து வந்திருக்கின்றோம்.

அந்தவகையில் எமது இளைஞர்களுக்கு சமூக ரீதியாகவே அன்றி அரசியல் ரீதியாகவோ சரியான வழியைக் காட்ட இவ்வாறான இளைஞர் அமைப்புகள் எம்முடன் இணைந்து சரியான பங்களிப்பை தருவார்களாக இருந்தால் நிச்சயமாக எமது இளைஞர் சமூகத்திற்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எம்மிடம் உள்ளது. இதை செய்து முடிக்கின்ற ஆற்றலும் அக்கறையும் மட்டுமல்லாது தற்துணிவும் எம்மிடம் உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி அதிபர் பாடசாலையின் தேவைப்பாடுகள் தொடர்பில் சில கோரிக்கைகளை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் முன்வைத்திருந்தார். அத்துடன்  கோப்பாய் பிரதேச இளைஞர் கழக சம்மேளனமும் தமது விளையாட்டுக்கழகத்தின் தேவைப்பாடுகள் தொடர்பில் சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தது. இவற்றை காலக்கிரமத்தில் பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக செயலாளர் நாயகம் டக்ஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக மலர் மாலை அணிவித்து பாண்ட் வாத்திய இசையுடன் விழா மேடைக்கு அழைத்துவரப்பட்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  விளையாட்டு நிகழ்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் கிழக்கு பிரதேச நிர்வாக செயலாளரும் குறித்த பிரதேச சபை உறுப்பினருமான இராமநாதன் ஐங்கரன் உடனிருந்தார்.

Related posts: