“எமக்கான எதிர்காலத்தை நீங்களே பெற்றுத்தரவேண்டும்” டக்ளஸ் தேவானந்தாவிடம் வட்டக்கச்சி மக்கள் கோரிக்கை!

எமக்கான பணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது சுகபோக வாழ்வை அனுபவித்து வருகின்ற நிலையில் அவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த நாமோ ஏதிலிகளாக வாழ்ந்துவருகின்றோம் என வட்டக்கச்சி மக்கள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதிக்கு இன்றையதினம் சென்றிருந்த செயலாளர் நாயகம் அப்பகுதி மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில் –
உரிமை உரிமை என்று கூறி எம்மிடம் வாக்குக் கேட்டு வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தாம் சொன்ன வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட எமக்காகச் செய்யவில்லை. ஆனால் தேர்தல் காலகட்டங்களின்போது மட்டும் தாயகம் சுய நிர்ணயம் தேசியம் எனக் கூறி எம்மிடம் வாக்குகளைக் கேட்டுவருகின்றார்கள்.
அது மாத்திரமன்றி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், அரசியல் உரிமைப் பிரச்சினை, இராணுவ வெளியேற்றம் உள்ளிட்ட பலதரப்பட்ட அவர்களது வாக்குறுதிகளை நம்பி அவர்களுக்கு நாம் வாக்களித்திருந்த நிலையில் அவர்கள் வெற்றி பெற்றதன் பின்னர் இன்று எம்மை திரும்பிக் கூடப் பார்ப்பது கிடையாது.
ஆனால் எமது வாக்குகளால் அவர்கள் வெற்றி பெற்றதன் பின்னர் அவர்களுக்குக் கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் குறிப்பாக எமக்கான அபிவிருத்திகளுக்கென ஒதுக்கப்பட்ட பணத்தில் அவர்கள் அனைவருமே சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வருவதுடன் மக்களது அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் பல கோடிக்கணக்கான ரூபாக்களை ஏப்பமிட்டு தமக்கான சுகபோகத்திற்காக ஆடம்பர மாளிகைகளை கட்டிவருகின்றார்கள்.
ஆனால் மக்களாகிய நாமோ உறவினர்கள் வீடுகளிலும் ஓலைக் குடிசைகளிலும் தகரக் கொட்டில்களிலும் எவ்விதமான அடிப்படை வசதி வாய்ப்புகளும் இன்றி வாழ்ந்துவருகின்றோம் என்றும் சுட்டிக்காட்டிய வட்டக்கச்சி பகுதி மக்கள் ” எமக்கான எதிர்காலத்தை நீங்களே பெற்றுத்தரவேண்டும்” என்றும் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
Related posts:
|
|