எனது முயற்சியால் கிடைக்கப்பெற்ற இந்தியன் வீட்டுத் திட்டத்தை உரிமை கோர எவருக்கும் அருகதை கிடையாது – டக்ளஸ் எம்.பி.!

Tuesday, January 30th, 2018

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு  நாம் மேற்கொண்ட முயற்சிகளின் பயனாகவே இந்திய அரசிடமிருந்து 50 ஆயிரம் வீட்டுத்திட்டங்களைப் பெற்றுக்கொடுத்தோம்.ஆனால் இந்த வரலாற்று உதவியை திரிபுபடுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அந்த திட்டத்தை தாமே கொண்டுவந்ததாக கூறுகின்றமையானது முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் விடயமாகவே கருத முடிகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்  நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

ஊர்காவற்றுறை தம்பாட்டி பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

நாம் தேர்தல் வெற்றிக்காக மட்டும் மக்களிடம் வாக்குக் கேட்டு வருபவர்கள் அல்லர். எக்காலத்திலும் எந்நிலையிலும் எம்மக்களுடன் நின்று மக்களுக்கான சேவைகளையே செய்துவருகின்றோம்.

இந்தத் தீவகத்தில் குறிப்பாக தம்பாட்டி பகுதியிலும் குடிநீர் பிரச்சினை என்பது தீர்க்கப்பட முடியாத பிரச்சினையாக இருக்கின்றபோதிலும் நாம் மீண்டும் இந்தப் பிரதேச சபையை வெற்றிகொள்ளும் சந்தர்ப்பத்தில் நிச்சயம் உரிய தீர்வுகளை பெற்றுத்தருவோம்.

இந்தத் தீவக மக்களுக்காகவே இரணைமடு குடிநீர்த்திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதை நாம் வலியுறுத்தி அத்திட்டத்திற்கு எமது முழுமையான ஆதரவினையும் வழங்கியிருந்தோம்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குறித்த திட்டத்திற்கு எதிராக செயற்பட்டதன் காரணமாக அத்திட்டம்ந டைமுறைப்படுத்தமுடியாமல் போனமையால் இங்கு இன்றும் குடிநீருக்கான பிரச்சினை தொடர்கின்றது.

இதுபோலத்தான் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்விடங்கள் அழிந்துபோன நிலையில் அந்த மக்களுக்கான வீடமைப்புத் தேவையின் அவசியத்தை நான் உணர்ந்துகொண்ட நிலையில் தான் 2010 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்தியாவுக்கு சென்றிருந்த சமயம் 50 ஆயிரம் கல் வீடுகளை கோரியிருந்தேன்.

நான் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக 50 ஆயிரம் கல் விடுகளை இந்திய அரசின் நிதி உதவியுடன் முழுமையான பங்களிப்பை வழங்குவதாக உறிதிமொழி தந்திருந்தது. அந்த உறுதிமொழிக்கு அமைவாகவே வடக்கு கிழக்கு பகுதிகளில் எமது மக்களுக்கு 50 ஆயிரம் விடுகளை பெற்றுக்கொடுத்திருந்தோம்.

ஆனால் இன்று எமது முயற்சியினால் கிடைக்கப்பெற்ற அந்த விட்டுத்திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தாமே கொண்டுவந்ததாக உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டுவருகின்றனர். இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும் என்பதுடன் இதனூடாகஅவர்களது பொய் முகத்திரை கிழிக்கப்படுவதாகவே உணரமுடிகின்றது.

இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களும் அரசியல் அவதானிகளும் குறிப்பாக இந்திய தூதரகம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் உண்மை நிலைமைகளை நன்கறிவார்கள் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

என்னால் முன்னெடுக்கப்பட்ட இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்திய அரசினூடான இந்த வீடமைப்புத் திட்டத்தை உரிமை கூறுவதற்கு எவருக்கும் அருகதை கிடையாது என்பதையும் இந்த உண்மை நிலையை எல்லா மக்களும் நன்கறிந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொய் முகத்தை வெளிக்கொணர வேண்டும் என்பதையும் நான் வலியுறுத்துகின்றேன்.