உள்ளூர் உற்பத்திகளின் விதைப்பு காலம் முதற்கொண்டே அதே பொருட்களின் இறக்குமதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படல் வேண்டும்!

உள்ளூர் உற்பத்திகளின் அறுவடையின்போது, அதே பொருட்களின் இறக்குமதிகளுக்கான வரிகளை அதிகரிப்பதால் மாத்திரம் இதற்கொரு தீர்வினை எட்ட முடியாது என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தீவிர பொறுப்பு சட்டமூலம், கொழும்பு பங்குத் தொகுதிப் பரிவர்த்தனையை பரஸ்பரமயமாக்கல் சட்டமூலம், வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் கீழான கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டபின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
ஏனெனில், உள்ளூர் உற்பத்திகளின் அறுவடைக்கு முன்பே அதே பொருட்களை போதியளவு இறக்குமதி செய்கின்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், உள்ளூர் உற்பத்திகளின் விதைப்பு காலம் முதற்கொண்டே அதே பொருட்களின் இறக்குமதிகளில் போதியளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்படல் வேண்டும்.
உள்ளூர் உற்பத்திகளின் அறுவடைகளின்போது, அந்த இறக்குமதிகள் தடைசெய்யப்படல் வேண்டும். அதேபோன்று, அறுவடைக்கு முன்னராக இறக்குமதிக்கான வரியை அதிகரித்துவிட்டு, அறுவடைகளின்போது, அதனைத் தளர்த்துவதிலும் எவ்விதமான அர்த்தமுமில்லை.
மேலும், வெற்றிலை மற்றும் பழ வகைகள் உற்பத்திகளில் வடக்கு மாகாணத்தினால் கணிசமானளவு பங்களிப்பினை நல்க முடியும். புகையிலை உற்பத்திக்கு எதிர்காலத்தில் தடை ஏற்படுத்தப் போவதாகக் கூறப்படும் நிலையில் தற்போது ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்கு ஓரளவு பங்களிப்பினை செலுத்துகின்ற வெற்றிலை செய்கையானது வடக்கிலே, குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக மேற்கொள்வதற்கான செழிப்பான மண்வளம் காணப்படுகின்றது. எனவே, அச் செய்கையை ஊக்குவிக்கின்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டிய அதே நேரம், வெற்றிலைச் செய்கைக்கு பெயர் பெற்ற, வலிகாமம் வடக்கு பகுதியில் இதுவரையில் விடுவிக்கப்படாத எமது மக்களின் சொந்த காணி, நிலங்களும் விடுவிக்கப்பட வேண்டும். அதே நேரம், புகையிலைச் செய்கைக்கு மாற்றாக அதே அளவில் பயன்தரத்தக்க பயிர்ச் செய்கைகள் இனங்காணப்பட்டு, எமது மண்வளத்தினையும் ஆராய்ந்து, எமது விவசாய மக்களினதும் இணக்கப்பாடுகளுடன், அறிமுகஞ்செய்து, உதவிகள் வழங்கப்பட்டு, ஊக்குவிக்கப்படல் வேண்டும்.
அதே நேரம் வடக்கிலே பழச் செய்கையினை மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும். அண்மையிலே அன்னாசிச் செய்கையானது வவுனியா மாவட்டத்திலே பாரிய வெற்றியை அளித்துள்ளதாகத் தெரிய வந்திருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் பழச் செய்கையினை மிகவும் பயன்தரத்தக்க வகையில் மேற்கொள்ள முடியும். யாழ்ப்பாண மண்ணும் தற்போது பழச் செய்கையில் போதியளவு பங்களிப்பினை வழங்கி வருகின்றது. எனவே இத்துறை உற்பத்திகள் சார்ந்தும் மேம்பாடுகள் உருவாக்கப்படல் வேண்டும்.
Related posts:
|
|