வடக்கு – கிழக்கு பட்டதாரிகளுக்கு இன விகிதாசார அடிப்படையில் அரச தொழில்வாய்ப்பு வேண்டும் – பிரதமரிடம் டக்ளஸ் எம்.பி. கேள்வி வலியுறுத்து!

Tuesday, September 19th, 2017

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை மிக அதிகளவில் அதிகரித்துள்ள நிலையில், அண்மைக் காலங்களில் இவர்களது வேலைவாய்ப்புக்களைக் கோரியதான போராட்டங்கள் முன்னெடுக்கப் பட்டிருந்தது. அந்த பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புக் கோரிக்கையை நிவர்த்தி செய்வதற்காக, 1990/15ஆம்; இலக்க சுற்றறிக்கையை மீண்டும் செயற்படுத்தி, அனைத்து அரச தொழிற்துறைகள் சார்ந்த நியமனங்களிலும் இன விகிதாசாரத்தைப் பேணுவதற்கு நடவடிக்கை எடுத்து உதவ முடியுமா? என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொருளாதார விவகாரங்கள் மற்றும் கொள்கை வகுப்பு விவகார அமைச்சர் என்றவகையில் பிரதமர் ரணில் விக்ரம சிங்கவிடம் இன்று(19.09.2017) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய செயலாளர் நாயகம் அவர்கள் தொடர்ந்து உரையாற்றுகையில், எமது நாட்டில் அரச நிறுவனங்களில் தமிழ் மொழி மூலமான கடமைப்பாடுகளை நிறைவேற்றுவதில் தமிழ் மொழி சார்ந்த புலமைகள், பரிச்சயங்களையுடைய அதிகாரிகள் மற்றும் உத்தியோகஸ்தர்களின் பற்றாக்குறைகள் காரணமாக தமிழ் மொழி மூலமான பரிச்சயங்களை மாத்திரம் கொண்ட மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் பாரிய பாதிப்புகளையும், சிரமங்களையும் தொடர்ந்து எதிர்நோக்கி வருகின்றனர்.

கல்வித்துறை சார்ந்த நிர்வாக ரீதியிலான அதிகாரிகளின் தெரிவுகளின்போதும் தமிழ் மொழி மூலமான தெரிவுகள் புறக்கணிக்கப்படுகின்றதொரு நிலை ஏற்பட்டு வருவதாகவே அத்துறை சார்ந்தோரால் தொடர்ந்தும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருவதையும் அடிக்கடி ஊடகங்களின் ஊடாக அறிய முடிகின்றது.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்ஹ பிரேமதாச அவர்களது காலத்தில, இன விகிதாசாரத்தின் அடிப்படையில்; அரச உத்தியோகஸ்தர்களுக்கான நியமனங்கள் இடம்பெற வேண்டும் என்பது தொடர்பிலான பொது நிர்வாக அமைச்சின் 1990ஃ15ஆம் இலக்க சுற்றறிக்கை ஒன்று 25. 03. 1990ல் கொண்டு வரப்பட்டு, அது 1995ஆம் ஆண்டு வரையில் அமுலில் இருந்ததை  இங்கு சுட்டிக்காட்டினார்.

மேற்படி 1990/15ஆம்; இலக்க சுற்றறிக்கையை மீண்டும் செயற்படுத்தி, அனைத்து அரச தொழிற்துறைகள் சார்ந்த நியமனங்களிலும் இன விகிதாசாரத்தைப் பேணுவதற்கு நடவடிக்கை எடுத்து உதவ முடியுமா? என்று கேள்வி எழுப்புவதுடன், அதற்கான பதிலையும், எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பான விளக்கத்தையும் பிரதமர் வழங்குவார் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

Related posts:

வன்முறை எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்- ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
பனைசார் உற்பத்தி பொருட்களை நவீனமயப்படுத்த முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – பனை அபிவிருத்தி சபையின...
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு ஈ. பி. டி. பி. யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வாழ்த...