கிடைக்கப்பெறுகின்ற வளங்களைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டும் – முல்லைத்தீவில் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, February 4th, 2018

முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கடற்றொழில் மட்டுமல்லாது கிடைக்கப்பெறுகின்ற அனைத்து வளங்களையும் பயன்படுத்தி அதனூடாக வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தளவில் கடல் வளம் மட்டுமன்றி போதியளவான நிலவளங்களுடன் கூடிய நிலப்பரப்புகள் அதிகளவில் உள்ள போதிலும் இந்த வளங்களை சரியாகப் பயன்படுத்தி எமது மக்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு காணவேண்டும்.

கடந்த காலங்களில் இந்த வளங்களைப் பயன்படுத்தி அதனூடாக ஒரு முன்னேற்றத்தைக் காண்பதற்கு உரிய சந்தர்ப்பம் கிடைக்கப்பெறாது போனமை எமது மக்களின் துரதிஸ்டம் என்றே கருத முடிகின்றது.  ஆகையினாலே இங்குள்ள வளங்களை உரிய முறையில் பயன்படுத்தி அதனூடாக மக்கள் எல்லா விதத்திலும் முன்னேற்றம் காணவேண்டும்.

இங்கு கடற்றொழிலாளர்கள் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அதில் ஒன்று இப்பகுதி கடற்றொழிலாளர்கள் வெளிப் பகுதிகளைச் சேர்ந்த சுருக்கு வலை மீன்பிடித்தலை மேற்கொள்ளும் கடற்றொழிலாளர்களால் தமது தொழில்துறைகளை முன்னெடுத்து அதனூடாக உயர்வு காண்பதில் பல இடர்பாடுகளை எதிர்கொண்டுவருகின்றனர்

எனவே இந்த நிலையிலிருந்து மட்டுமல்லாது ஏனைய தேவைப்பாடுகளுடன் வாழும் கடற்றொழிலாளர்களும் ஏனைய மக்களும் உரிய முறையில் தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணக்கூடிய வகையில் நாம் திட்டங்களை செயற்படுத்தவுள்ளோம். அதற்கு மக்களின் ஆணை எமக்கு அவசியமாகும். எனவே வரவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் தமது வாக்குப் பலத்தினூடான ஆணையை தருவார்களேயானால் நிச்சயம் இப்பகுதியில் மாற்றத்தை உருவாக்கிக் காட்டுவோம் என்றார்.

இதனிடையே தியோநகர், உப்பமாவடி, குமுழமுனை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டங்களிலம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: