உள்ளூராட்சி தேர்தலை மக்கள் உரிய முறையில் பயன் படுத்தினால் நிச்சயம் எம்மால் சாதித்துக்காட்ட முடியும்  – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, January 18th, 2018

அனலைதீவில் கிடைக்கப்பெறுகின்ற இயற்கை வளங்களைக் கொண்டு இங்கு வாழும் மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு வரவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை மக்கள் உரிய முறையில் பயன்படுத்துவார்களேயானால் நிச்சயம் எம்மால் சாதித்துக்காட்ட முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு தீவகத்தின் அனலைதீவு பிரதேசத்தில்  போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்புக்களை மேற்கொள்ளும் பொருட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் (19)  விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இங்கு நான் பார்த்தபோது பனை மரங்களும் கற்றாளைச் செடிகளும் இயற்கையாக வளர்ந்து அழகுதரும் அதேவேளை செழிப்பாக இருப்பதையும் காணமுடிகின்றது.

இவ்வாறாகக் கிடைக்கப்பெறுகின்ற இயற்கை வளங்களைப் பயன்படுத்தி அதனூடாக புதிய தொழில் துறைகளை விருத்தி செய்து மக்களின் வாழ்வாதாரம் வளர்த்தெடுக்கப்பட்டு உயர்த்தப்பட வேண்டும்.

இங்குள்ள தரிசு நிலங்களில்  தென்னங்கன்றுகள், மரமுந்திரிகை போன்ற மரங்களை நாட்டி அதனூடாக உரிய பலன்களை மக்கள் பெற்றுக்கொள்ளும் வகையிலான நலன் சார் திட்டங்களை மேற்கொள்ளும் பல நடவடிக்கைகள் இருக்கின்றன.

அதுமட்டுமன்றி இங்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட விடயங்களிலும் அக்கறை செலுத்த நாம் மிகுந்த அவதானத்தயும் அக்கறையையும் செலுத்திவருகின்றோம். குறிப்பாக மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையில் உள்ளூர் நிதிகளை மட்டுமன்றி வெளியூர்களில் கிடைக்கப்பெறும் குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வாழும் உறவுகளிடமிருந்து நிதிமூலங்களைப் பெற்று அவற்றினூடாகவும் அபிவிருத்தியில் பின்னடைந்துள்ளதாக கூறப்படும் இந்தப் பகுதியை நிச்சயம் நாம் மாற்றத்தை நோக்கி கொண்டுவருவோம். அதற்காக இந்திய அரசும் நிதி உதவிகளை வழங்க முன்வந்துள்ளதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

நாம் எப்போதும் உங்களுடனேயே வாழ்ந்துவருகின்றோம். 90 காலப்பகுதிகளில் நாம் தீவகத்திற்கு மட்டுமன்றி யாழ். குடாநாட்டுக்கும் வந்திருக்காவிட்டால் வன்னியில் மக்களுக்கு என்ன நடந்ததோ அதுபோன்றதொரு அவலம் நிச்சயமாக இங்கும் ஏற்பட்டிருக்கும்.  இந்த நிலையில் இது தேர்தல் காலம் என்றபடியால் பல கட்சிகளும் பல வாக்குறுதிகளுடன் உங்களை நாடி வருவார்கள்.

அவ்வாறு யார் வந்தாலும் கூட நாம் மட்டுமே மக்களுடன் நின்று மக்களுக்கான சேவைகளை கடந்தகாலங்களில் எவ்வளவோ நெருக்கடிகளுக்கும் சவால்களுக்கும் மத்தியில் முன்னெடுத்திருந்தோம். அதேபோன்று எதிர்காலங்களிலும் நிச்சயமாக நாம் முன்னெடுப்போம் அதை உறுதியாக கூற விரும்புகின்றேன்.

எனவே வரவுள்ள சந்தர்ப்பத்தை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தி உங்களது வாழ்வை இருண்ட யுகத்திலிருந்த மாற்றங்காணச் செய்து சுபீட்சமான எதிர் காலத்திற்கு இட்டுச் செல்லும் இந்தத் தருணத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Related posts: