யாழ்.போதனா வைத்தியசாலை நிலைவரங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை – சுகாதார அமைச்சரிடமும் வலியுறுத்தல்!

Wednesday, May 5th, 2021

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான அதிதீவிர சிகிச்சைப் பிரிவை விஸ்தரிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் கொறோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், வடக்கு மாகாணத்தின் பிரதான வைத்தியசாலையாக இருக்கும் யாழ். போதனா வைத்தியசாலையில், கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அதிதீவிர சிகிச்சை கட்டில்கள் நான்கு மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் தாக்கம் அதிகரிக்குமாயின், அதனை எதிர்கொள்வதற்கு குறைந்தபட்சம் 20 அதிதீவிர சிகிச்சை கட்டில்களும் அவற்றிற்கான உபகரணங்களும் உடனடியாக தேவைப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஸ்ரீபவானந்தராஜாவினால் கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

அதேபோன்று, யாழ். போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு பொருத்தமான உற்பத்தித் திறனுடைய ஒட்சிசன் பிறப்பாக்கி ஒன்றினையும் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்துள்ள குறித்த வைத்தியசாலை பணிப்பாளர்,  தற்போது காணப்படுகின்ற ஒட்சிசன் பிறப்பாக்கி, வைத்தியசாலைக்கு  தேவையான ஒட்சிசனை உற்பத்தி செய்வதற்கு போதுமானதல்ல என்பதுடன் கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றமையினால்  உற்பத்தி திறனும் குறைவடைந்துள்ளது.   இதன் காரணமாக வைத்தியசாலைக்கு தேவையான மேலதிக ஒட்சிசன்கள் தற்போது தெல்லிப்பழை மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைகளில் இருந்தே பெற்றுக் கொள்ளப்படுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்விடயங்கள் விடயங்கள் தொடர்பாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியுடன் கலந்துரையாடியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த கோரிக்கைகள் தொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தினையும் வலியுறுத்தியுள்ளார்.

கடற்றொழில் அமைச்சரின் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி தேவையான நடவடிககைளுக்கு அறிவுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

Related posts:

கடன் சுமை நாட்டுக்கு பெரும் நெருக்கடியை தரப்போகின்றது - நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய டக்ளஸ் எம்.பி!
நிர்க்கதியானவர்கள் வீடு திரும்ப புதனன்று தீர்வு – அமைச்சரவையில் கோரிக்கை வைக்கிறார் அமைச்சர் டக்ளஸ் ...
முல்லை. நாயாறு களப்பு பிரதேச மக்களின் கோரிக்கைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடி நடவடிக்கை!