இழந்த தமது செல்வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்தவே கம்பரலிய, சமுர்த்தியை தூக்கிப் பிடிக்கிறது கூட்டமைப்பு – டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Thursday, June 13th, 2019

மக்களிடம் இழந்துள்ள தமது செல்வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்தும் வகையிலேயே கம்பரலிய மற்றும் சமுர்த்தி போன்ற திட்டங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது செயற்படுத்தி வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றயைதினம் நடைபெற்ற கட்சியின் மாவட்ட, பிரதேச நிர்வாக செயலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எமது மக்கள் நீண்டகால போரின் தாக்கங்களுக்கு நேரடியாக முகங்கொடுத்து பல்வேறுபட்ட துன்பதுயரங்களை மட்டுமல்லாது வலிகளையும் சுமந்து வாழ்ந்துகொண்டே இருக்கின்றார்கள்.

குறிப்பாக யுத்தகால நெருக்கடிகளுக்குள் வாழ்ந்ததன் காரணமாக மக்கள் எதிர்கொண்ட மற்றும் எதிர்கொண்டுவரும் எல்லாவிதமான இடர்பாடுகளுக்கெல்லாம் முழுமையான தீர்வுகள் இதுவரை முழுமைப்படுத்தப்படவில்லை. பல்வேறுபட்ட தேவைப்பாடுகளுடனேயே மக்கள் யுத்தம் முடிந்து 10 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் நெருக்கடியான அவல வாழ்வையே வாழ்ந்து வருகின்றார்கள்.

இந்நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பல்வேறு வகையான செயற்றிட்டங்களை வகுத்து அவற்றுக்கு செயல்வடிவம் கொடுத்தது மட்டுமன்றி முடியுமானவரையில் அம்மக்களின் இயல்பு வாழ்க்கைக்காக நாம் பெரும் துணையாக நின்றிருக்கின்றோம்.

ஆனால் எமது இணக்க அரசியலை எள்ளி நகையாடிய சக தமிழ் கட்சிகள் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்கள் மத்தியில் தற்போது அம்பலப்பட்டு நிற்கின்றார்கள்.

இந்நிலையில்தான் மக்கள் மத்தியில் இழந்த தமது செல்வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்தும் வகையில் கம்பரலிய மற்றும் சமுர்த்தி போன்ற செயற்றிட்டங்களை நடைமுறைப்டுபடுத்தவதாக மக்கள் மத்தியில் காட்டிக் கொள்கின்றார்கள்.

இது ஒருவகையில் அடுத்த தேர்தலுக்காக தம்மை தயார்ப்படுத்திக் கொள்ளும் கூட்டமைப்பினரின் வியூகமாகவே எம்மால் அவதானிக்க  முடிகின்றது என்று கூறிய டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் காலங்களில் ஜதார்த்தத்தை புரிந்துகொண்டு மக்கள் உண்மையான அரசியல் தலைமைகளை தெரிவு செய்வதற்கு இன்றுள்ள அனுபவங்களை பாடமாகக் கொள்ள வேண்டும் என்றும் அவர் இதன்போது கூட்டிக்காட்டினார்.

Related posts:

கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் - மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு!
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு பொருட்களை இறக்குமதி செய்ய ஏற்பாடு - அமைச்சர் டக...
கிளிநொச்சி கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்ச...