இலங்கைத் தேயிலையின் தரத்தையும் நன்மதிப்பையும் பாதுகாக்க நடவடிக்கை அவசியம் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

Thursday, May 24th, 2018

எமது நாடு இருக்கின்ற பொருளாதார நிலையில், நீண்ட காலமாக எமக்கு அந்நியச் செலாவணி ஈட்டலில் பெருந் தூணாக இருந்து வருகின்ற ‘இலங்கைத் தேயிலையையும் அதன் நன்மதிப்பையும் காப்பாற்றுங்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை தேயிலைச் சபை (திருத்தச்) சட்டமூலம், இரண்டாம் மதிப்பீடு தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் –

தேயிலையுடன், கோஸ்ரிக் சோடா, பெரஸ் சல்பேட், கொண்டிஸ், அயன் மாத்திரைகள், தென்னந் துகழ்கள், மரத்தூள் என்பன கலக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு எவ்வகையிலும் ஏற்பில்லாத துகழ்கள் தேயிலை என்ற பெயரில் இன்று இலங்கையில் பரவலாகவே பாவனையில் இருந்து வருகின்றது.

அத்துடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஈரான் கூட இத்தகைய தேயிலையை தங்களது நாட்டுக்கு அனுப்ப வேண்டாம் எனக் கூறுமளவுக்கு இந்த வியாபாரம் நடந்தேறியிருக்கின்றது. இத்தனைக்கும் இலங்கையில் ஒரு தேயிலைச் சபை செயற்பாட்டில் இருக்கின்றது.

‘நிராகரிக்கப்பட்ட தேயிலைகளை கொள்வனவு செய்வதற்கும், மேலதிக தயாரிப்பு செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் நிறுவனங்கள் பதிவு செய்யப்படல் வேண்டும் என்ற விதிமுறை இருந்த போதிலும், உங்களது கவனமின்மை காரணமாக பல்வேறு தரப்புகள் பதிவு செய்து கொள்ளாமலேயே மேற்படி திருட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த வர்த்தகர்கள் தேயிலைத் தொழிற்சாலைகளுடன் தொடர்புகளைப் பேணி, நல்ல தேயிலையுடன், மேற்படி தேயிலையையும் கலந்து, தர இலச்சினை இன்றி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதாகவும், இதன் பின்னணியில் சில அரசியல்வாதிகள் இருப்பதாகவும் அடிக்கடி ஊடகங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.

இத்தகைய தேயிலைக்கு கறுப்பு நிறத்தினைக் கொடுப்பதற்காக சோடியம் பைகாபனேற், கோன் சிரப் போன்றவை கலக்கப்படுவதால் அவை நீரிழிவு, மாரடைப்பு, கொலொஸ்ட்ரோல் போன்ற நோய்களுக்கான இரசாயன அழுத்தங்களைக் கொடுப்பதாகத் தெரிய வருகின்றது.

இத்தகைய, மக்கள் பாவனைக்குதவாத, மிகுந்த தீங்கு விளைவிக்கின்ற தேயிலை வகைகள் இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே மிகத் தாராளமாக விற்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, உவர் தன்மை கொண்ட நீர் அதிகமாகப் பாவனையில் இருக்கின்ற பகுதிகளை இலக்கு வைத்தே இத்தகைய தேயிலை விற்பனைக்கு விடப்படுகின்றன என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இத்தனைக்கும் மக்கள் பாவனைக்குதவாத இவ்வகைத் தேயிலையானது ‘சிலோன் ரீ’ என்ற பெயரிலேயே பொதி செய்யப்பட்டு, இலங்கையிலும், வெளிநாடுகளிலும் சந்தைக்கு விடப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

அதே போன்று, தேயிலையில் சீனி, குளுக்கோஸ் கலக்கப்படுவதாகக் கூறப்பட்டு, 82 தேயிலை தொழிற்சாலைகள் இனங்காணப்பட்டுள்ளதாக கடந்த பெப்ரவரி மாதம் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. இவ்வாறு இனங்காணப்பட்டுள்ள தொழிற்சாலைகள் தொடர்பில் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள்? அந்த தொழிற்சாலைகள் யாவை? போன்ற விபரங்களை எமது மக்களின் அவதானத்திற்கு வெளியிட தேயிலைச் சபை முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

எனவே, இன்று நாடு இருக்கின்ற பொருளாதார நிலையில், நீண்ட காலமாக எமக்கு அந்நியச் செலாவணி ஈட்டலில் பெருந் தூணாக இருந்து வருகின்ற ‘இலங்கைத் தேயிலை’யை தயவு செய்து காப்பாற்றும் படி கேட்டுக் கொள்கின்றேன்.

Untitled-17 copy

Related posts:


"மணிவிழா நாயகனை மனதார வாழ்த்துகின்றோம்" - தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வ ...
மாற்றத்தை விரும்பும் தமிழ் மக்களுக்காக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து நாம் எடுத்திருக்கும் உ...
கிளிநொச்சி சர்வதேச விளையாட்டரங்கை சீர்ப்படுத்த நாமல் ராஜபக்ஷ நடவடிக்கை! அமைச்சர் டக்ளசின் முயற்சியால...