இறால் அறுவடையே எமக்கு வாழ்வாதாரமாக உள்ளது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பயனாளிகள் நன்றி தெரிவிப்பு!

Wednesday, April 29th, 2020

யாழ் குடாநாட்டின் தொண்டமானாறு, உப்பாறு, ஆவரங்கால், மண்டான் ஆகிய பகுதி நன்நீரேரிகளிலிருந்து பெருமளவு இறால் அறுவடையில் அப்பகுதிகளின் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

பருவகால கடலுயிரின வளர்ப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட குறித்த கருத்திட்டத்திற்கு அமைய வடபகுதியில் தொண்டமனாறு, மண்டான், ஆவரங்கால், மற்றும் உப்பாறு ஆகிய பகுதிகளிலுள்ள ஏரிகளில் இவ்வருடம் ஜனவரி மாத இறுதிப் பகுதியில் ஏறத்தாள 40 இலட்சம் இரால் குஞ்சுகள் விடப்பட்டிருந்தது.

நாடளாவிய ரீதியில் இறால் வளர்ப்புக்கு ஏதவான வளமான அனைத்து இடங்களிலும் இறால் குஞ்சுகளை வளரச்செய்வதன் ஊடாக அப்பகுதிகளில் வாழும் மக்கள் தமது பொருளாதாரத் உயர்த்திக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்த முடியுமென்ற தூரநோக்கு திட்டத்திற்கு அமைவாக கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் நிலையான நீர் நிலைகள் அடையாளம் காணப்பட்டு பல இலட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டன.

இதன் ஒரு கட்டமாக யாழ். குடாநாட்டின் தொண்டமானாறு, உப்பாறு, ஆவரங்கால், மண்டான் ஆகிய பகுதி நன்நீரேரிகளில் விடப்பட்ட 40 இலட்சம் இறால் குஞ்சுகள் தற்போது வளர்ந்துள்ளதால் அங்கு மக்கள் இறால் அறுவடையை ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன் இப்பகுதி ஏரிகளில் சுமார் 8 ஆயிரம் கிலோ இறால் மக்களால் அறுவடை செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது நாடு எதிர்கொண்டுள்ள கொரோனா அச்சமும் தொடர்ச்சியான ஊரடங்கும் காரணமாக வறுமையை எதிர்கொண்டிருந்த மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தீர்க்க தரிசனமான கருத்திட்டம் பேருதவியாகவும், வாழ்வாதாரமாகவும் அமைந்துள்ளதாக குறித்த பகுதி மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட குறித்த திட்டத்தினூடாக கடந்த வாரம் நெடுந்தீவு பகுதியில் இரால் அறுவடை ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: