இன மத ரீதியில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் தீர்மானங்களை அனுமதிக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ்!

Thursday, December 2nd, 2021

இனமத ரீதியில் யாரையும் புண்படுத்தும் வகையில் எந்தவிதமான தீர்மானங்களும் அமையக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பல்லின மக்கள் வாழுகின்ற இந்த நாட்டில் ஒவ்வொருவரும் ஏனையவர்களின் உணர்வுகளை பாதிக்காத வகையில் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்து ஆலயத்திற்கு முன்பாக கருவாடு காய வைக்கும் வாடி அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திருகோணமலை கடலூர் முருகன் ஆலயத்திற்கு முன்பாக மீன் கருவாடுகளை காய வைக்கும் வாடி அமைப்பதற்கு சம்மந்தப்பட்ட பிரதேச அமைப்புக்களினால் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட குறித்த ஆலய நிர்வாகத்தினர், முருகன் ஆலயத்தின் சுற்றுவட்டாரத்தில் கருவாட்டு வாடி அமைக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பது, ஆலயச் சூழலின் புனித்தன்மையை பாதிப்பதாகவும், குறித்த வாடி அமைக்கப்பட்டுள்ள இடத்திலேயே ஆலயத்தின் தீர்த்தோற்சவம் நடத்தப்படுவது மரபாக இருகின்ற நிலையில்,

பிரதேசத்தில் வாழுகின்ற இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இந்த தீர்மானம் அமைந்துள்ளது எனவும் கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆலயப் பிரதேசத்தில் கருவாட்டு வாடி அமைப்பதனால் இந்து மக்களுக்கு ஏற்படக்கூடிய உணர்வு ரீதியான பாதிப்புக்களை எடுத்துரைத்ததுடன், இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான நல்லுறவிற்கும் இந்தத் தீர்மானம் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதனால், குறித்த கருவாட்டு வாடியை பொருந்தமான இன்னொமொரு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

000

Related posts:

மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமேயன்றி குறைக்கப்படக் கூடாது- டக்ளஸ் தேவானந்தா
தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைகளையும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் -; செயலாளர் நாயகம் டக்ளஸ் ...
எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது – ஊடகக் செய்தியில் அமைச்ச...