இனங்களுக்கிடையில் முரண் பாடுகளைத் தூண்டுகின்ற செயற்பாடுகள் தேசிய நல்லிண க்கத்தை சீர்குலைக்கும் – நாடாளு மன்றத்தில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு

Wednesday, May 24th, 2017

அண்மித்த காலமாக எமது நாட்டில் நாடளாவிய ரீதியில் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தூண்டுகின்ற பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு எமது மக்களிடையே பதற்றமானதொரு நிலை தோற்றுவிக்கப்பட்டு வருவதானது, தேசிய நல்லிணக்கத்தை நோக்கியதான இந்த அரசின் பயணத்தை சீர்குலைக்கும் செயற்பாடுகளாகவே நிலைகொண்டு வருகின்றன. இவ்வாறான செயற்பாடுகளை எந்தத் தரப்பினர் மேற்கொண்டாலும், அச் செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன், இத்தகைய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தி, இனங்களுக்கிடையில் சுமுகமானதொரு உறவை கட்டியெழுப்புவதன் ஊடாக நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கினைப் பேண வேண்டிய கடப்பாடு இந்த அரசுக்கு உண்டு என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள், தென் மாகாண அபிவிருத்தி மற்றும் சட்டம், ஒழுங்கு விவகார அமைச்சர் சாகல ரத்னாயக்காவிடம் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து உரையாற்றிய செயலாளர் நாயகம் அவர்கள், அம்பாறை மாவட்டத்தில், மாணிக்கமடு, மாயக்கல்லி மலை சிலை வைப்பு விவகாரத்தைத் தொடர்ந்து, எமது நாட்டில் சுமார் 40க்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களது வணக்க ஸ்தலங்கள் தாக்குதல்களுக்கு உட்பட்டுள்ளதாகவும், கடந்த 15ஆம் திகதி அதிகாலை பானந்துறை பகுதியில் ஒரு முஸ்லிம் பள்ளிவாயல் பெற்றோல் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியும், வெல்லம்பிட்டிய, கொகிலவத்தை பகுதியில் மேலுமொரு முஸ்லிம் பள்ளிவாயல் கற்களால் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வரும் நிலையில், அதே தினம் திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தோப்பூர், செல்வநகர், நீனாக்கேணி பகுதியில் காணி அபகரிப்பு சம்பவம் ஒன்றினால் ஏற்பட்டுள்ள பிணக்கு காரணமாக, 16ஆம் திகதி இரவு அப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்கள் காரணமாக முஸ்லிம் மக்களது 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி வாழ் மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 21ஆம் திகதி அதிகாலை குருனாகலை, மல்லவப்பிட்டி பகுதியில் முஸ்லிம் பள்ளிவாயல்மீது பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், அதே தினம் அதிகாலை பெந்தோட்டை, எல்பிட்டிய பகுதியில் முஸ்லிம் நபருக்குச் சொந்தமான வர்த்தக நிலையமொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது என்றும், பொலன்னறுவை, சின்னவில் பட்டி முஸ்லிம் கிராமத்தில் இருந்து அம் மக்களை வெளியேறுமாறி கூறப்பட்டு அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், கடந்த 22ஆம் திகதி அதிகாலை மஹரகம மற்றும் அம்பாறை பகுதிகளில் முஸ்லிம் வர்த்தகர்களுக்குச் சொந்தமான இரு வர்த்தக நிலையங்கள் எரிக்கப்பட்டுள்ளன என்றும், அந்த வகையில் கடந்த இரு வாரங்களில் நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான 19 இனவாதச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இத்தகைய செயற்பாடுகள் தொடர்வதாகவும்  தெரிய வருகின்றது.

அதே நேரம், கடந்த 18ஆம் திகதி தென் பகுதியிலிருந்து வந்திருந்த ஒரு குழுவினரால் இலங்கை தேசியக் கொடியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகின்ற நிறங்கள் அகற்றப்பட்ட தேசியக் கொடியினை ஒத்த கொடிகள் கிளிநொச்சி நகரப் பகுதியில் ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இத்தகைய செயற்பாடுகள், இனங்களிடையே தற்போது கட்டியெழுப்பப்பட்டு வருகின்ற இன ஐக்கியத்திற்கும், தேசிய நல்லிணக்கத்திற்கும் பெரும் பாதிப்பினை எமது மக்கள் மத்தியிலிருந்து ஏற்படுத்தியுள்ளதுடன், ஒருவிதமான பதற்ற நிலையினையும் எமது மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளன.

அதே நேரம், கடந்த 19ஆம் திகதி அதிகாலை கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை, கச்சார்வெளி பகுதியில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக ஒரு சம்பவம் குறித்தும் தெரிய வந்துள்ளது.

மேற்படி, இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்ற வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸார் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்பதையும், மேற்படி நடவடிக்கைகளின் தற்போதைய நிலவரம் யாது என்பதையும் அறியத்தர முடியுமா?

மேலும், இத்தகைய செயற்பாடுகள் எதிர்காலத்தில் இடம்பெறாதிருக்கக்கூடிய வகையில் எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? கிளிநொச்சி, பளை பகுதியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் உண்மை நிலவரம் என்ன என்பதை அறியத்தர முடியுமா?

எனது மேற்படி கேள்விகளுக்கான பதில்களையும், மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைள் தொடர்பிலான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் சாகல ரத்னாயக்க அவர்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றேன் என்றும் சுட்டிக்காட்டனார்.

Related posts:


13ஆவது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று நடைமுறையில் சுயநிர்ணய உரிமையை பெற்றிருக்க முடிய...
பனை சார் தொழிலும் எமது மக்களுக்கு தூரமாக்கப்பட்ட ஒரு துறையாகிப் போவது மிகுந்த வேதனையைளிக்கின்றது - ச...
உறுதியற்ற பொருளாதார கட்டமைப்பே பெரும் பாதிப்புக்களுக்கு காரணமாக அமைகின்றது – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்...