பாடநூல்களில் தமிழர் வரலாறு இருட்டடிப்பு செய்யப்படுவது தொடர்பான பிரச்சினைக்கு எம்.பி. டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் தீர்வு!

Sunday, October 7th, 2018

திட்டமிட்ட வகையில் தமிழ் வரலாற்று பாட நூல்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டுவந்த தமிழர் வரலாறு தொடர்பிலான பிரச்சினைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினரூடாக  மேற்கொண்ட முயற்சியால் தீர்வு எட்டப்பட்டுள்ளதாக துறைசார் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

எமது நாட்டின் தமிழ் மூலப்  பாடநூல்களைப் பொறுத்தவரையில், குறிப்பாக வரலாற்றுப் பாட நூல்களில் தமிழர் வரலாறானது தொடர்ந்தும் திரிபுபடுத்தல்களுக்கும், மூடி மறைப்புக்களுக்கும், புறக்கணிப் புக்களுக்கும் உட்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது.

இந்த நிலைமைகள் அகற்றப்பட்டு நாட்டின் உண்மையான வரலாற்றை எமது மாணாவர்களுக்கு கற்பிக்க வேண்டியது அவசியமாகும்.

அந்தவகையில் தமிழர் வரலாற்றுப் பாடநூல்கள் சிங்கள வரலாற்று ஆசிரியர்களால் சிங்கள மொழியில் எழுதப்பட்டவை என்றும், அந்நூல்களே தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அப்படியே மொழி பெயர்க்கப்படுகின்றன என்றும், இதில், தமிழ் வரலாற்று ஆசிரியர்களின் பங்களிப்பு எழுத்துப் பிழைகளைச் சரி பார்ப்பது மட்டுமே என்றும் இந்தநிலை மாற்றப்பட வேண்டும்  என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அத்துடன் தமிழ் வரலாற்று பாடநூல்களை தயாரிப்பதற்கென தகுதிவாய்ந்த தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும்.

அதே நேரம் எமது நாட்டில் இடம்பெற்றுள்ள உண்மையான வரலாற்று நிகழ்வுகளை மூடி மறைக்காமல் – திரிபு படுத்தாமல் பாடநூல்களில் உள்ளடக்கப்பட வேண்டும்.

தமிழர்களின் பண்டைய இருப்பை வெளிப்படுத்தக்கூடிய ஆட்சிகள், ஆட்சியாளர்கள் தொடர்பிலான விடயங்கள் எவையும் பாடசாலை மாணவர்களுக்கான வரலாற்று பாடநூல்களில்  தெளிவாக இடம் பெறாமையானது பாரிய குறைபாடாகும்.  அத்தகைய குறைபாடுகளுடன்கூடிய வரலாறே எமது மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.

இவ்வாறான மூடி மறைப்புகள் – திரிபுபடுத்தல்கள் என்பன பாடசாலை பாடங்களின் ஊடாக எமது மாணவர்களுக்கு புகுத்தப்படுகின்ற நிலையில், எமது நாட்டு மாணவர்கள், இளம் சந்ததியினரிடையே தாங்கள் இந்த நாட்டிலிருந்தும் அந்நியப்பட்டவர்கள் என்ற எண்ணக் கருவே ஆழமாக மனதுள் பதிந்துவிடுகின்றது. அத்துடன் இது நாட்டின் இன நல்லிணக்கத்திற்கும் தாக்கத்தை ஏற்படுத்திவந்திருக்கின்றது.

மக்களிடையே மேலும், மேலும் கசப்புணர்வுகளை வளர்க்கும் முகமாகவே இவ்வாறான பாடத் திட்டத் தயாரிப்புகள் காணப்படுவதாகத் தெரியவருகிறது. இது மிகுந்த அவதானத்தைச் செலுத்த வேண்டிய விடயமாகும் எனவும் சிங்கள மாணவர்கள் இந்நாட்டின் தமிழர் மற்றும் ஏனைய இனத்தவர் பற்றிய வரலாற்றையும், பண்பாட்டையும், தமிழர் மற்றும் ஏனைய இனத்தவர் சிங்கள மக்களின் வரலாற்றையும், பண்பாட்டையும் தெரிந்துகொள்ள வழியேற்படுத்த வேண்டும் என துறைசார்ந்தவர்களிடம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையிலான தமிழ் புத்திஜீவிகள் குழு சுட்டிக்காட்டியிருந்தனர்.

அத்துடன் புத்தகங்களில் உள்ள குறைபாடுகளையும், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான பரிந்துரைகளையும் துறைசார்ந்த தமிழ் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் என பலதரப்பினரையும் அழைத்து நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ்  தேவானந்தா ஆராய்ந்திருந்தார்.

அத்துடன் தமிழ் மாணவர்களுக்கான வரலாற்றுப் பாட நூல்களில் சிங்கள பௌத்த மக்களின் வரலாறு தொடர்பான விடயங்களே மிகக் கூடுதலான அளவில்  இணைக்கப்பட்டிருக்கின்றன –

தமிழர்களின் வரலாற்றுக்கு உரியவாறு இடம் கொடுக்கப்படவில்லை. மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எமது வரலாற்று நிகழ்வுகளுக்குக்கூட முக்கியத்துவம் வழங்காது புறக்கணிக்கப் பட்டுள்ளது என பல குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.

இதனடிப்படையில் தமிழ் மூல வரலாற்றுப் பாடநூல்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள், குறைபாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டி ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் ரணில் விக்ரம சிங்க, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், இராஜாங்க கல்வி அமைச்சர் இராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ்  தவானந்தா அவர்கள் இது குறித்து தெரியப்படுத்தி இருந்ததுடன் அதற்கான ஆலோசனை கூட்டங்களும் துறைசார்ந்தவர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

அதன்போது புத்தகங்களில் உள்ள குறைபாடுகளையும், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான பரிந்துரைகளையும் துறைசார்ந்த தமிழ் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோரைக் கொண்டமைந்த குழு ஒன்றின் ஆலோசனைகள், பரிந்துறைகளை என்பவற்றைத் திரட்டித் தயாரிக்கப்பட்ட ஆவணச் சுருக்க இணைப்புக்களும் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் பலதடவைகள் கேள்வி எழுப்பியதும் பின்னர் கல்வி அமைச்சரது அனுசரணையுடன் இராஜாங்க அமைச்சரின் தலைமையில் தேசிய கல்வி நிறுவக பிரதிநிதிகள், கல்வி வெளியீட்டுத் திணைக்கள பிரதிநிதிகள், பரீட்சைத் திணைக்கள பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளடங்கலாக ஒன்றுக்கு மேற்பட்ட கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு தவறுகள் சீர்செய்யப்படும் என பொது இணக்கம் காணப்பட்டது.

அதனடிப்படையில் அவை குறித்த திருத்தங்கள் தமிழ் வரலாற்று பாடப்புத்தகத்தில் கொண்டுவருவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இதில் தமிழ் மன்னனான எல்லாள மன்னனின் வரலாறு உள்ளிட்ட பல வரலாறுகள் தனித்தவமானதாக உள்வாங்கப்படவுள்ளது.

தற்போது இது தொடர்பான மாற்றங்கள் கொண்டவரப்பட்டு அவை தேசிய கல்வி பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்போது அவை நடைமுறைப்படுத்தவதற்கான இறுதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதற்கான நடவடிக்கைகளின் இறுதி வடிவமைப்பை தாம் உள்ளிட்ட குழுவினரால்  மேற்கொள்ளப்பட்டு வருவதாக பேராசிரியர் புஸ்பரத்தினம்  தெரிவித்தார்.

வரலாற்றைக் கற்பதற்கான முக்கிய நோக்கம் வரலாறு தந்த பாடங்களை அவை துன்பகரமானதாக இருக்கலாம், சாதனை நிறைந்ததாக இருக்கலாம், ஒற்றுமையான நிகழ்வுகளை குறிப்பதாக இருக்கலாம் அந்த வரலாற்றை ஒரு இனத்திற்கு வாய்ப்பாக திரிபுபடுத்தக் கூடாது.

உண்மையான வரலாறு தெரியவரும் போதுதான், நாட்டு மக்கள் மத்தியில் ஒற்றுமையையும் தேசப் பற்றையும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வையும் வளர்த்தெடுக்கமுடியும் என்பதுடன் இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தையும் உருவாக்கிக் கொள்ள முடியும்.

 unnamed-1-6

unnamed-2-3

Related posts:

எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர இன்னும் எத்தனை வருடங்கள் எடுக்கும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம...
யாழ் நகர சிற்றங்காடி வியாபாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று...
அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வரும்வரை அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும் - செயலாளர் நாயகம...