சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு முறையான நியமனக் கடிதங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, February 9th, 2017

சமுர்த்தித்  திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு முறையான நியமனக் கடிதங்களை உடனடியாக வழங்குவதற்கும், 20 வருடங்கள் கடந்துள்ள நிலையில் மேற்படி உத்தியோகத்தர்களுக்கான பதவி உயர்வுகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றத்தில் வாழ்வின் எழுச்சி (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்

1995ஆம் ஆண்டின் 30ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை சமுர்த்தி அதிகார சபை மற்றும் சமுர்த்தி ஆணையாளர் நாயகம் திணைக்களம் என்பன வறுமையை ஒழிக்கும் தளத்தில் நலன் உதவி மற்றும் சமூகப் பாதுகாப்பு, வாழ்வாதார அபிவிருத்தி, சமூக அபிவிருத்தி உட்கட்டமைப்பு அபிவிருத்தி, குறு நிதியுடன் தொடர்பான வங்கி வலையமைப்பு போன்ற பிரதான மூன்று நிலைகளில் பங்காற்றியுள்ளன.

இந்த வேலைத்திட்டத்தை மேலும் வலுப்படுத்தி, உணவுப் பாதுகாப்பு, நிலையான அபிவிருத்தி, மக்கள் பங்கேற்பு போன்றவற்றை உறுதிப்படுத்தும் வகையில் பல சர்ச்சைகள், எதிர்ப்புகள், போராட்டங்களுக்கு மத்தியில் 2013ம் ஆண்டின் 01ம் இலக்க வாழ்வின் எழுச்சி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு, இலங்கை சமுர்த்தி அதிகார சபை, இலங்கை தெற்கு அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை மலைநாட்டு அபிவிருத்தி அதிகார சபை, சமுர்த்தி ஆணையாளர் நாயகம் திணைக்களம் போன்ற நிறுவனங்கள் அதன் கீழ் கொண்டு வரப்பட்டன.

இன்று மேற்படி வாழ்வின் எழுச்சி எனும் பெயர் மாற்றப்பட்டு, அதற்கு சமுர்த்தி என்ற பெயர் கொண்டுவரப்படவுள்ள நிலையில், இவ்வாறான மாற்றங்கள் பணியாளர்கள் மற்றும் பயனாளிகளிடையே குழப்பங்களை எற்படுத்தாத வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும்,

இவ்வாறான திட்டங்களின் தன்மைகள், வெளியீடுகள், நடைமுறைகள், அமுலாக்கங்கள் என்பன பேணத்தகுந்த அபிவிருத்தியை இலக்காகக் கொண்டே உருவாக்கம் பெற வேண்டும் என்றும்,

ஜனசவிய, சமுர்த்தி, வாழ்வின் எழுச்சி என வெவ்வேறு பெயர்களை காலத்திற்குக் காலம் சூட்டிக் கொண்டிருப்பதால், 1000க்கும் மேற்பட்ட சமுர்த்தி வங்கிகள், 300க்கும் மேற்பட்ட வங்கிச் சங்கங்கள் போன்றவற்றின் பெயர்ப் பலகைகள், ஆவணங்கள் போன்ற விடயங்களில் மாற்றங்களை மேற்கொள்ள பாரிய நிதியினைச் செலவு செய்ய வேண்டும். அந்த நிதியை வறுமை ஒழிப்புக்குச் செலவு செய்தால் பல குடும்பங்கள் பயன்பெறும் என்பதால் ஆட்சிக்கு ஆட்சி இவ்வாறான பெயர் மாற்றங்களைத் தவிர்ப்பது நல்லது. எனவே வறுமை ஒழிப்புத் திட்டத்தின் நோக்கம், செயற் பணிகள் போன்ற இலக்குகளை அடைவதற்கு உரிய அவதானங்களைச் செலுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன், மேற்படித் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான முறையான நியமனக் கடிதங்களை உடனடியாக வழங்குவதற்கும்,

20 வருடங்கள் கடந்துள்ள நிலையில், மேற்படி உத்தியோகத்தர்களுக்கான பதவி உயர்வுகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும்,

சம்பளக் குறியீடுகளை அவர்களுக்கு வகுத்துக் கொடுக்குமாறும், காணப்படுகின்ற பதவி வெற்றிடங்களை தகுதி வாய்ந்தவர்களைக் கொண்டு நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும்,

யாழ் மாவட்டத்தில் 53,840 குடும்பங்கள் சமுர்த்தி உதவி பெறும் நிலையில் 41,421 குடும்பங்கள் அதனை எதிர்பார்க்கின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில்  11, 740 குடும்பங்கள் உதவி பெற்றும், 16, 640 குடும்பங்கள் அதனை எதிர்பார்த்தும்,

முல்லைதீவு மாவட்டத்தில் 11,105 குடும்பங்கள் பெற்றும் வருகின்ற 12,266 குடும்பங்கள் எதிர்பார்த்தும்,

மன்னார் மாவட்டத்தில் 13,166 குடும்பங்கள் பெற்றும், 14,000 குடும்பங்கள் எதிர்பார்த்தும்,

வவுனியா மாவட்டத்தில் 11,956 குடும்பங்கள் பெற்றும், 16,004 குடும்பங்கள் எதிர்பார்த்தும,;

கிழக்கு மாகாணத்திலும் மேலும் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அதனை எதிர்பார்த்தும் இருப்பதால், அவற்றையும் வழங்க உரிய நடவடிக்கை எடுத்து உதவுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

Parliament-of-srilanka-1024x683 copy

Related posts:

நிலையான ஆட்சிக்கு வாய்ப்பில்லையேல் நாடாளுமன்றத்தை கலைத்துவிடுங்கள் - சபையில் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை...
மீன்பிடிப் படகு உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய நியம ஒழுங்கு...
வடக்கில் போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு - கடுமையான நடவடிக்கைக்கு அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!