இந்து மற்றும் முஸ்லிம் மக்களது மத ரீதியிலான  நாட்களிலும் மதுபான சாலைகளை  மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவும்! – டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் கோரிக்கை!

Saturday, February 11th, 2017

இந்து மற்றும் இஸ்லாமிய மக்களது மத ரீதியிலான முக்கியத்துவமிக்க நாட்களான சிவராத்திரி, தைப் பொங்கல், தீபாவளி, மீலாதுன் நபி தினம் மற்றும் ஹஜ்ஜூப் பெருநாள் போன்ற தினங்களிலும் நாடளாவிய ரீதியில் மதுபான சாலைகளை மூடுவதற்கு கொள்கை ரீதியிலான தீர்மானம் எடுத்து, அதனை செயற்படுத்துமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் எழுத்து மூல கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ் விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், எமது நாட்டைப் பொறுத்த வரையில் 12 பௌர்ணமி தினங்களிலும், வெசாக் பௌர்ணமி தினத்துக்கு மறு தினமும் என 13 நாட்களிலும், தேசிய சுதந்திர தினம், உலக மது ஒழிப்புத் தினம், தமிழ் – சிங்களப் புத்தாண்டு தினத்திற்கு முந்தைய தினம், தமிழ் – சிங்களப் புத்தாண்டு தினம், ஈதுல் பித்ர் – றமழான் பெருநாள் தினம், நத்தார் தினம் ஆகிய 6 நாட்களிலுமாக வருடத்தில் 19 நாட்கள் மதுபான நிலையங்கள் மூடப்படுகின்றன.

அதே நேரம், இந்து மக்களின் மத ரீதியிலான  முக்கியத்துவமிக்க   தினங்களாகிய மகா சிவராத்திரி தினத்திலும், தைப் பொங்கல், தீபாவளி போன்ற திருநாட்களிலும், அதே போன்று சகோதர முஸ்லிம் மக்களால் மிகவும் புனிதமான தினமாகக் கொண்டாடப்படுகின்ற முஹம்மது நபிகளாரது பிறந்த தினமான மீலாதுன் நபி தினத்திலும், ஈதுல் அல்ஹா – ஹஜ்ஜூப் பெருநாள் தினத்திலும் மேற்படி மதுபான சாலைகள் மூடப்படுவதில்லை.

எனவே, இவ்விடயம் தொடர்பில் கூடிய அவதானத்தைச் செலுத்தி, இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களை மேலும் கௌரவிக்கும் வகையிலும், அந்த மக்களின் உணர்வுகளை மதிக்கின்ற வகையிலும், அதே நேரம் எமது நாட்டில் மது பாவனையை மேலும் ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்துகின்ற நோக்கிலும,; மேற்படி 5 நாட்களிலும் மதுபான சாலைகளை நாடளாவிய ரீதியில் மூடுவதற்கு கொள்கை ரீதியில் தீர்மானம் எடுத்து, அதனை செயற்படுத்த நடவடிக்கை எடுத்து உதவுமாறு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

DD11

Related posts:

அக்கறையும் ஆற்றலும் இல்லாதவர்களின் கரங்களில் அதிகாரங்கள் சிக்கியமையே இன்றைய நிலைக்கு காரணம் - அமைச்ச...
வல்வெட்டித்துறை, தொண்டமானாறு களப்பு பிரதேச நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கள ஆய்வு!
அபிவிருத்தி திட்டங்களுக்கான அங்குரார்பண நிகழ்வின் கிளிநொச்சி மாவட்ட ஏற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக...

ஒரு தொலைபேசி அழைப்பில் மக்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கக்கூடிய விடயங்களுக்கு கூட ஏனைய தரப்புகளால் த...
தரமுயர்த்தப்பட்டபோதும் மீண்டும் பாதிப்புக்களை சந்திக்க நேரிடுகின்றது - தீர்வு தாருங்கள் என புதிதாக உ...
நடந்தவை நடந்ததாகே இருக்கட்டும். நடக்கப் போவது நல்லதாக அமையட்டும்- முல்லைத்தீவில் அமைச்சர் டக்ளஸ் தே...