அரச நிறுவனங்களின் வெற்றி அதன் பிரதானிகளின் நியமனங்களிலேயே தங்கியுள்ளது – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டு!
Tuesday, June 19th, 2018அரச நிறுவனங்கள் உயரிய பயனை எட்ட வேண்டுமெனில் அவற்றுக்கென நியமிக்கப்படுகின்ற பிரதானிகளில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அரசாங்க கணக்குகள் தொடர்பிலான கணக்குகள் பற்றிய குழுவினது அறிக்கை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
அரச நிறுவனங்கள் தொடர்பிலான பல்வேறு முறைப்பாடுகளையே நாம் கடந்த பல காலங்களாக கேள்வியுற்று வருகின்றோம். ஒரு நிறுவனத்தை சிறந்த முறையில் இயக்கி, அதன் மூலமான போதிய பயன்களை ஈட்டுவதற்குப் பதிலாக, அந்த நிறுவனத்தின் மூலமாக தத்தமது தனிப்பட்ட அபிலாசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு முனைகின்;ற நபர்கள் அத்தகைய நிறுவனங்களின் பிரதானிகளாக நியமனம் பெறுகின்ற நிலைகளிலேயே இத்தகைய தவறுகள், முறைகேடுகள், ஊழல், மோசடிகள் இடம் பெறுவதாகத் தெரிய வருகின்றது.
அந்தந்த நிறுவனங்களின் ஏனைய பதவிகளுக்கென கல்வி, திறமை மற்றும் தகுதி அடிப்படையில் நபர்கள் தெரிவு செய்யப்படுகின்ற நிலையில், அவற்றின் பிரதானிகள் அரசியல் நியமனங்களாக இருக்கின்ற நிலையில், அந்த அரசியல் நியமனங்களும் அந்தந்த துறைகள் சார்ந்த அனுபவங்களுடன் கூடிய ஏனைய தகுதிகளையும் அடிப்படையாகக் கொண்டவைகளாக இருத்தலே அவசிமாகின்றது.
நட்டமேற்படுகின்ற அரச நிறுவனங்களை கட்டியெழுப்புவதற்காக எனக் கூறப்பட்டு, அரச தொழில் முயற்சிகள் அமைச்சு உருவாக்கப்பட்டது. எனினும், அந்த அமைச்சு அரச நிறுவனங்களை விற்கின்ற அமைச்சாகக் காணப்படுகின்றதே அன்றி, அரச நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதாகத் தெரிய வரவில்லை.
ஒரு சில அரச மற்றும் தனிப்பட்ட ஆய்வு ரீதியிலான அறிக்கைகளைப் பார்க்கின்றபோது, இந்த நாட்டைப் பொறுத்த வரையில் அரசாங்கமானது வர்த்தக முயற்சிகளில் ஈடுபடுவது சாத்தியமானதாக இல்லை என்ற விடயம் வலியுறுத்தப்பட்டு வருவதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.
இந்த இடத்தில் அரசியல் தலையீடுகள், அடிப்படை செயற் திறன் இன்மை, இயலாமை – முயலாமை போன்ற காரணிகளை நாம் முதன்மை படுத்த வேண்டியுள்ளது.
எனவே, இந்த நிலையிலிருந்து நாங்கள் மேற்படி அரச நிறுவனங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமே அன்றி, அவற்றினை உடனடியாக விற்று விட முயற்சிப்பதை மாத்திரமே குறியாகக் கொள்ளல் நல்லதல்ல. ஏனெனில், இங்கு அரச நிறுவனங்களில் வேலைவாய்ப்புப் பெற்றிருப்போரது வாழ்வாதாரம் தொடர்பிலும் சிந்திக்க வேண்டியுள்ளது. அதே நேரம், எமது பகுதிகளில் ஏற்கனவே செயற்பட்டிருந்த அரச நிறுவனங்களையும், தற்போதைய தேவைகளுக்கேற்ற மறுசீரமைக்கப்பட வேண்டியத் தேவைகளும், ஏனைய வளங்களைப் பயன்படுத்தியதான புதிய தொழில் முயற்சிகளின் உருவாக்கங்களும் தேவைப்படுகிறன.
அந்த வகையில் மேற்படி அரச நிறுவனங்களை முன்னெடுப்பது தொடர்பில் நீண்ட காலத்திற்குரிய செயற்றிறன் கொண்ட கொள்கை வகுப்புகள் அவசியமாகின்றன. பொது படு கடன் பெறுதலானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும் எனும் கொள்கை உறுதியில் இந்த அரசு தொடர்ந்து செயற்படுகின்ற நிலையில், அரச சொத்துக்களை விற்கின்ற ஒரு நிலைக்குத் தள்ளப்படலாம்.
ஆனால், விற்பனை மூலமாகப் பெறப்படுகின்ற வருமானமானது வரி வருமானத்தினைப் போலன்றி, ஒரு முறை மாத்திரமே கிடைக்கப் பெறக்கூடிய வருமானமாகும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
Related posts:
|
|