இந்துப் பேருலகிற்கு பெரும் இழப்பு – அனுதாபச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

Monday, May 24th, 2021


சமூகச் சிந்தனையும் ஆகமப் பற்றும் கொண்ட சிவஸ்ரீ சம்பு மகேஸ்வரக் குருக்களின் மறைவு அந்தணர் சமூகத்திற்கும் இந்துப் பெருமக்களுக்கும் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலய ஆதீன கர்த்தாவும் சுதுமலை அம்மன் கோயில் பிரதம குருவும், சர்வதேச இந்துமத குரு பீடாதிபதியுமான சிவஸ்ரீ சம்பு மகேஸ்வரக் குருக்களின் மறைவு தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்ட அனுதாபச் செய்தியிலேயே மேற்குறித்தவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

அமரர் மகேஸ்வரக் குருக்கள், ஆகமம் சார்ந்த கடமைகளை மாத்திரமன்றி சமூக நலன் சார்ந்த செயற்பாடுகளிலும் தன்னுடைய அக்கறையை வெளிப்படுத்தியிருந்தார்.

அதன் காரணமாக, நெருக்கடியான காலகட்டங்களிலும் மக்கள் நலன் சார்ந்த சிந்தனைகளோடு என்னை அணுகி, பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தார்.

அத்துடன், யாழ் இந்து குருமார் ஒன்றியத்தினை சர்வதேச குருமார் ஒன்றியமாக மாற்றுவதன் மூலம் சர்வதேச அவதானத்தினை எமது மதத் தலைவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற எனது எதிர்பார்ப்பிற்கு செயல் வடிவம் கொடுப்பதில் அமரர் மகேஸ்வரக் குருக்களின் பங்கு காத்திரமானதாக அமைந்திருந்தது.

இவ்வாறு, ஆளுமை மிக்க, பாரம்பரிய பின்னணியைக் கொண்ட மூத்த சிவாச்சாரியாரை இழந்து துயருற்று இருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும், அந்தணர் சமூகத்திற்கும், இந்துப் பேருலகிற்கும் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: