அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு இன்று அகவை அறுபத்து மூன்று – தமிழ் மக்கள் தொடர்ச்சியான வாழ்த்து பறிமாற்றம்!

Tuesday, November 10th, 2020

தேசிய நல்லிணக்கத்தின் ஊடாகவே எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வைக்கான முடியும் என்று கூறிவருவதுடன், நடைமுறைச்சாத்தியமான அரசியல் பாதையில் தமிழ் மக்கள் தம்மோடு அணி திரண்டு பயணிக்க முன்வர வேண்டும் என்றும் தொடர்ந்தும் கூறிவரும் தமிழ் மக்களின் ஜனநாயகத் தலைவரும், கடற்றொழில் அமைச்சரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஈழ மக்களின் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் epdpnews.com பணியாளர்களாகிய நாமும் பெருமை கொள்கின்றோம்

1957ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி, ஈழ மக்களின் விடியலுக்காக பிறந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இன்று அகவை 63 இல் தடம் பதிக்கின்றார்.

15 வருடங்களுக்கும் மேலாக ஆயுதப் போராட்டங்களில் தன்னை முன்னிறுத்திய மூத்த போராளியான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், 1994 ஆம் ஆண்டு நாடாளுமன்ற அரசியலில் தன்னை ஈடுபடுத்தினார்.

தமிழர் அரசியல் வரலாற்றில் தொடர்ச்சியாக ஏழாவது தடவையாகவும் மக்களால் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்,  இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே சிரேஷ்ட தர நாடாளுமன்ற உறுப்பினராக மதிக்கப்படுகின்றார்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியை தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்கான திசைகாட்டியாக முன்னிறுத்தி அதன் தலைமைப் பொறுப்பை செவ்வனவே செய்து வருவதால் அவர், வீணைக் கொடி வேந்தனாக கட்சியின் ஆதரவாளர்களால் போற்றப்படுகின்றார்

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தாரக மந்திரத்திற்கு அமைவாக மாறி, மாறி வந்த ஆட்சியாளர்களுடன், தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சனையின் தீர்வுக்காகவும், அன்றாடப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளுக்காகவும், அபிவிருத்திக்கான தீர்வுக்காகவும் நடைமுறைச்சாமத்தியமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தும் தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார்.

காலத்திற்குக் காலம் ஆட்சியாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி, காணப்பட்ட இணக்கத்திற்கு அமைய ஆட்சியில் பங்கெடுத்து பல்வேறு மத்திய அமைச்சுப் பொறுப்புக்களை வகித்து அதன் பெறுபேறாகவும், இரவு, பகல் பாராத ஓய்வின்றிய  உழைப்பின் காரணமாகவும், யுத்தத்தில் அகப்பட்ட மக்களை பாதுகாக்கவும், பட்டினியை எதிர்கொண்டிருந்த பட்டினிச்சாவிலிருந்து பாதுகாத்தும், தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்த உறவுகளுக்கும், வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையே உறவுப்பாலமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்கள் பணியாற்றினார்.

கிடைத்த அரசியல் பலத்திற்கு ஏற்றவாறு யுத்தத்தால் அழிந்த வடக்கு மாகாணத்தை துரிதமாக மீளக்கட்டி எழுப்புவதில் அயராது பாடுபட்டார். அதன் பெறுபேறாக துண்டிக்கப்பட்டுக் கிடந்த லக்ஷபான மின்சாரம் மீண்டும் வடக்கில் ஒளி பாய்ச்சியது, தூக்கி வீசப்பட்டிருந்த தண்டவாளங்கள் மீண்டும் பதிக்கப்பட்டு யாழ். தேவி புகையிரதம் மீண்டும் வடக்கின் காற்றில் வசந்தம் பாடியது.

சரிந்து கிடந்த வடக்கின் உட்கட்டுமானங்கள் மீண்டும் புத்தெழுச்சி பெற்றது. நாவற்குழியில் பனை ஆராய்ச்சி மையம் மீண்டும் நிமிர்ந்து எழுந்தது. யாழ்ப்பாண நூல் நிலையம் பீனிக்ஸ் பறவையாய் சாம்பலிலிருந்து மீண்டு எழுந்தது,  அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கப்பட்டது. அறிவியல் நகரில் யாழ். பல்கலையின் பொறியில் பீடம் அமையப்பெற்று பல வருடக் கனவு நணவானது. ஆனையிறவு உப்பளம் மீண்டும் உற்பத்திக்கு தயாரானது. ஆயிரக்கணக்கானவர்களுக்கு அரச வேலை கிடைத்தது. பல நூறு சுகாதாரத் தொண்டர்களும், தொண்டர் ஆசிரியர்களும் வேலை வாய்ப்புப் பெற்று தலை நிமிர்ந்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஐம்பதாயிரம் இந்திய வீட்டுத் திட்டம், எண்பதாயிரம் பேருக்கு சமுர்த்தித் திட்டம், யாழ். நகரில் இந்திய கலாசார மண்டபம், இன்னும் ஏராளமான அபிவிருத்திப் பணிகளையும், கண்ணீர் துடைக்கும் மனிதாபிமானப் பணிகளையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செய்து முடித்தார்.

இருந்தபோதும் ஆரம்பித்த பணிகள் இன்னும் செய்து முடிக்கப்படவில்லை என்றும், இன்னும் பல்வேறு காரியங்கள் ஆற்றவேண்டியிருக்கின்றது என்றும், அவற்றை செய்து முடிக்க தமிழ் மக்கள் தனது கரங்களை மேலும் பலப்படுத்த வேண்டும் என்றும் தொடர்ந்தும் கூறிவருகின்றார்.

அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவும், அரசியல் போட்டி காரணமாகவும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மீதும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களையும், அவதூறுகளையும் அரசியல் எதிரிகள் சுமத்தி வரும்போதும், வரலாறு என்னை விடுதலை செய்தது, காலம் உண்மையை உணர்த்தி வருகின்றது என்று கூறி வருவதுடன், ‘ என் கடன் பணி செய்து கிடப்பதேயாகும்’ என்று தொடர்ந்து சோர்வற்று உழைத்து வருகின்றார்.

தற்போது கடற்றொழில் அமைச்சராவும், கிளிநொச்சி மாவட்டத்தின் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராகவும் பொறுப்பேற்று தமிழ் மக்களின் விமோசனத்திற்காக, தான் வரித்துக்கொண்ட கொள்கை வழியில் நிகற்ற உறுதியோடும், மாறாத கொள்கையோடும், சவால்களையும், எதிர்ப்புக்களையும் எதிர் கொண்டபடி மக்கள் சேவையில் முழு மனதோடு தன்னை ஈடுபடுத்தி வருகின்றார்.

இத்தகைய மக்கள் நேசிப்பாளரை இன்றைய நாளில் மன நிறைவோடு வாழ்த்தி நிற்கும் தமிழ் பேசும் மக்களுடன் நாமும் இணைந்து வாழ்த்துகின்றோம்.

Related posts:


வடக்கில் உள்ள அஞ்சலகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விரைவாக தீர்க்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக...
இரணைமடு குளத்திலிருந்து கடலுக்கு திறந்துவிடும் மேலதிக நீரை யாழ். மக்களுக்கு குடிநீராகத் தாருங்கள் - ...
நீர்வள தொழில்சார் ஊக்குவிப்பு திட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நாளை அங்குரார்ப்பணம்!