180 நாள் கடந்த தற்காலிக ஊழியருக்கு நிரந்தர நியமனம் – நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் அறிவுறுத்து!

Friday, May 8th, 2026


…..
தற்காலிக அடிப்படையின் பேரில் பணியாற்றும் ஊழியர்களை  அரச சேவைக்கு நிரந்தரமாக உள்வாங்குவது தொடர்பில் அரசாங்கத்தால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக, வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் உரிய நடவடிக்கைகளை இரு வார காலத்தினுள்  நிறைவு செய்ய வேண்டும் என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்  பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் மாகாணத் திணைக்களத் தலைவர்களுடனான விசேட முகாமைத்துவக் கலந்துரையாடல்,  ஆளுநர் அவர்களின் தலைமையில் இன்று (08.05.2026)  ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் போதே ஆளுநர் அவர்கள் இந்த அறிவுறுத்தலை வழங்கினார்

அரச நிறுவனங்களில் தற்காலிக, அமைய (நாளாந்த), பதிலீட்டு, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையின் பேரில் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டு, தொடர்ச்சியாக 180 நாட்களைப் பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதில் நீண்டகாலமாகப் பல சிக்கல்கள் நிலவி வந்தன.

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 25/2014 மற்றும் 29/2019 ஆகியவற்றின் அடிப்படையில் நியமனங்களை வழங்குவதில் காணப்பட்ட இத்தடைகளை நீக்கி, இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களால் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் விசேட முன்மொழிவு ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது.

அதற்கமைவாகவே தற்போது அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 11/2026 வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய சுற்றறிக்கையின் மூலம், நிரந்தர நியமனங்கள் வழங்குவதில் இதுவரை காலமும் காணப்பட்ட நிர்வாகத் தடைகள் முற்றாக நீங்குவதுடன், ஊழியர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என ஆளுநர் தனதுரையில் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 11/2026 இன் நியமங்களின்படி, தகைமை பெற்றுள்ள அனைவருக்கும் எவ்வித தாமதமுமின்றி வழமையான அனுமதி நடைமுறைகளினூடாக நிரந்தர நியமனங்களை இரு வாரங்களுக்குள் விரைவாக வழங்க வேண்டும்.

முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திடம் அனுமதி பெறவேண்டியுள்ள நியமனங்கள் தொடர்பில், உரிய வழிமுறைகளினூடாக உடனடியாகக் கோரிக்கைகளைச் சமர்ப்பித்து துரிதமாக அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

புதிய சுற்றறிக்கையின் கீழ் உள்ளடக்கப்பட முடியாமல், நிரந்தர நியமனம் பெறத் தகுதியற்றவர்களாக ஏதேனும் ஊழியர்கள் இருப்பின், அவர்களைக் கைவிடாது, அவர்களது முழுமையான விவரங்கள் அடங்கிய பட்டியலைத் தயாரித்துச் சமர்ப்பிக்க வேண்டும்.

அவை தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி அவர்களுக்கான மாற்றுத் தீர்வுகள் குறித்து ஆராயப்படும், என ஆளுநர் குறிப்பிட்டார்

Related posts:


மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம - குருணாகல் வரையான பகுதியில் 20ஆம் திகதி முதல் மக்கள் பாவனைக்கு!
விளையாட்டு அமைச்சை மீண்டும் பொறுப்பேற்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமலிடம் துறைசார் தரப்பினர் வலியு...
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ஆதரவு - முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா உறுதியளிப்பு!