வடக்கில் 2,500 மாணவர்கள் இம்முறை ஓ.எல். பரீட்சையில் சித்தியடைய வாய்ப்பிலையாம்  –  ஆளுநர்!

Tuesday, November 18th, 2025


……..
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் விளிம்பு நிலை மாணவர்களுக்கான கூடுதல் கல்வி ஆதரவை வழங்கும் நோக்கில் வடக்கு மாகாணம் புதிய செயற்றிட்டத்தை முன்னெடுக்கிறது. இதனை முன்னிட்டு வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் நேற்று திங்கட்கிழமை  (17.11.2025) கலந்துரையாடல் ஒன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றதாக ஆளுநர் ஊடகப் பிரிவு அனுப்பிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் – யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தொழில்நுட்ப உதவியுடன் அனலைதீவு மற்றும் எழுவைதீவு பிரதேசங்களில் ஏற்கனவே இணையவழி வகுப்புகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்த முயற்சியை மாகாணம் முழுவதும் விரிவாக்க  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண கல்விப் பணிமனையின் தரவுகளின்படி, மாகாணத்தின் 13 வலயங்களிலும் சுமார் 2,500 மாணவர்கள் இந்த முறை ஓ.எல். பரீட்சையில் சித்தியடைவதற்கான போதிய தகைமையின்மையுடன் உள்ளனர்.

இன்றைய கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், கல்வி மட்டத்தை உயர்த்துவது மாகாணத்தின் முன்னுரிமை. ஸ்மார்ட் போர்ட் அல்லது ஸ்மார்ட் ரிவி வசதியுள்ள பாடசாலைகளை அடையாளம் கண்டு அவற்றில் இணையவழி வகுப்புகளை நடத்துங்கள். விளிம்பு நிலையிலுள்ள மாணவர்களை இணையவழியில் வகுப்புக்கள் நடைபெறும் பாடசாலைகளில் கட்டாயம் பங்கேற்க செய்யுங்கள். ஆசிரியர் ஒருவர் பாடசாலையில் பொறுப்பாக பணிபுரிய வேண்டும்.

மாணவர்களின் வரவு உறுதிப்படுத்தப்பட வேண்டும். பெற்றோர்களுக்கும் வகுப்புகள் குறித்து தெரிவிக்கப்பட வேண்டும், என்று வலியுறுத்தினார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர், கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களுக்கான அலகு ரீதியான கற்பித்தல் மற்றும் பரீட்சைகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும், தேவைக்கேற்ப பிற பாடங்களையும் கற்பிக்க முடியும் என்றும் தெரிவித்தார். கொவிட் கால அனுபவம் இந்த முயற்சியை மேலும் சிறப்பாக செயல்படுத்த உதவும் எனவும் அவர் கூறினார்.

உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் பிற பாடங்களுக்கான தேவையைக் குறிப்பிட்டனர். கல்வி அமைச்சின் செயலாளர், செயற்றிட்டம் தொடர்பான தெளிவான வழிகாட்டுதல்களை அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டியதையும், இலக்கு மாணவர்களை வகுப்புகளுக்கு இணைப்பது அதிபர்களின் பொறுப்பு என்பதையும் சுட்டிக்காட்டினார்.

பரீட்சைக்கு இரண்டரை மாதங்கள் உள்ள நிலையில், விளிம்பு நிலை மாணவர்களை சித்தியடையும் நிலைக்கு கொண்டுவர உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும், என்று மாகாண கல்விப் பணிப்பாளர் கேட்டுக்கொண்டார்.

தயார் நிலையில் உள்ள பாடசாலைகள் மற்றும் மாணவர்களை இணைத்து வரும் புதன்கிழமையிலிருந்து (19.11.2025) வகுப்புகளை ஆரம்பிக்கும் என கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது.

கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர், ஒவ்வொரு வலயங்களின் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோர் நேரடியாகவும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இணையவழியாகவும் இணைந்தனர்.
0000

Related posts: