மாமனிதனாக வாழ்ந்து மறைந்துள்ளார் ஜோசேப்பு சேவியர் செல்வநாயகம் – இரங்கல் குறிப்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Tuesday, August 5th, 2025


மாமனிதன் என்ற கௌரவத்திற்கு பொருத்தமானவராக அமரர் ஜோசேப்பு சேவியர் செல்வநாயகம் வாழ்ந்து மறைந்திருப்பதாக தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, அன்னாரின் மக்கள் நலன் சார்ந்த சிந்தனைகளும் செயற்பாடுகளும் அவரை மக்கள் மத்தியில் மரியாதைக்கு உரியவராக உயர்த்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.

உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த முன்னாள் அரச அதிகாரியின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி உரையாற்றிய செயலாளர் நாயகம் மேலும் தெரிவிக்கையில்,

90 களின் ஆரம்பத்தில் தீவகத்தில் நிர்வாகச் செயற்பாடுகளை மீள ஆரம்பித்து அந்த பிரதேச மக்களுக்கு சுமூக நிலையை ஏற்படுத்துவதற்கு நாம் முயற்சிகளை மேற்கொண்டபோது,  அரச நிர்வாக அதிகாரிகள் பலரும் அன்றைய அரசியல் சூழல் காரணமாக தயக்கம் தெரிவித்தனர்.
ஆனால், அப்போது அரச திட்டமிடல் சேவை அதிகாரியாக இருந்த அன்னார், தன்னுடைய காலக் கடமையை உணர்ந்து அரச நிர்வாக சேவைக்கு மாறுவதற்கு முன்வந்திருந்தார்.

அதனடிப்படையில், விசேட அமைச்சரவை பத்திரத்தின் மூலம் ஊர்காவற்றுறை பிரதேச உதவி அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார்.

அந்தக் காலப் பகுதியில் அரசியல் தலைமையை வழங்கி வந்த என்னோடு அடிக்கடி தொடர்பு கொண்டு மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடி பல விடயங்களை சாத்தியமாக்கினார்.

அன்னாரின் இவ்வாறான மக்கள் சேவை, பிற்காலத்தில் வடக்கு கிழக்கு மாகாண சபையிலும், பின்னர் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராகவும் சிபார்சு செய்து பல்வேறு நன்மைகளை மக்களுக்கு கிடைக்கச் செய்யக் கூடியதாக இருந்தது.

இவ்வாறான  ஒருவரை மாமனிதராக போற்றப்பட வேண்டியவர் என்ற கருத்தை இங்கு உரையாற்றிய ஆசிரியர் செல்வா குறிப்பிட்டிருந்தார்.

உண்மையிலேயே, மக்கள் சேவையூடாக மாமனிதனாக நிரூபித்த அமரர் செல்வநாயகத்திற்கு எமது அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று தெரிவித்தார்.

Related posts: