“மல்வானையில் இருக்கும் வீடு என்னுடையது அல்ல – நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, November 20th, 2021

ஊடகங்களின் கூடுதல் கவனத்திற்கு உள்ளாகி இருக்கும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கும் கம்பஹா – மல்வானை பிரதேசத்தில் இருக்கும் வீடு தனக்கு சொந்தமானது அல்ல என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் அந்த வீடு தனக்கு சொந்தமானது அல்ல என்பது நீதிமன்றத்தில் ஒப்புவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வாராந்த பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் நிதியமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “மல்வானையில் இருக்கும் வீடு என்னுடையது அல்ல. அது நீதிமன்றத்தில் முடிவாகும். அதற்காக நான் தொடர்ந்தும் நீதிமன்றத்திற்கு சென்று வருகிறேன். அடுத்த மாதமும் வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது. நீதிமன்றம் சுதந்திரமானது என்று நான் இன்னும் நம்புகிறேன்” எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

அரசுக்கு சொந்தமான பணத்தை தவறாக பயன்படுத்தி, மல்வானை பிரதேசத்தில் மிகப் பெரிய காணி ஒன்றை கொள்வனவு செய்து, ஆடம்பர வீடு மற்றும் அதனுடன் கூடிய நீச்சல் தடாகம் நிர்மாணிக்கப்பட்டமை தொடர்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அவரது உறவினரான திருகுமார் நடேசன் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு கம்பஹா மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

குறித்த வீடு தனக்கு சொந்தமானது அல்ல என பசில் ராஜபக்ச கூறிய போதிலும் வீட்டை நிர்மாணிப்பதற்கான பணத்தை அவரே வழங்கியதாக சாட்சியாளர் ஒருவர் நீதிமன்றத்தில் அண்மையில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: