மாணவர்களுக்கு எனது ஆதரவு நிச்சயம் கிடைக்கும் – யாழ்ப்பாணத்தில் தென்னிந்திய பாடகர் ஸ்ரீனிவாஸ் !

Saturday, July 19th, 2025

இங்குள்ள பிள்ளைகள் இசைத்துறையில் மிளிர இசை தொடர்பான வகுப்புக்கள், பயற்சிகளுக்கு என்னால் முடிந்த ஆதரவை நிச்சயமாக வழங்குவேன் என தென்னிந்திய பிரபல பாடகர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் சனிக்கிழமை மாலை நடைபெறவுள்ள இசை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள ஸ்ரீனிவாஸ், நேற்றையதினம் (18) மருத்துவ பீடத்தில் தனது மகள் சரண்யாவுடன் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“யாழ்ப்பாணத்திற்கு வந்தது பெரும் சந்தோசம். உலகில் எந்த நாட்டுக்கு போனாலும் அங்கே ஈழத் தமிழர்கள் எனக்கு தரும் அன்பும் ஆதரவும் அதிகம்.  யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நேரம் முதல் இங்குள்ளவர்கள் அன்பை மட்டுமே வெளிப்படுத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.

நடைபெறவுள்ள இசை நிகழ்வு மருத்துவ பீட மாணவர்கள் தமது கற்றல் செயற்பாட்டுக்கு சென்று வருவதற்கு பேருந்து வாங்க நிதி திரட்டவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இசை நிகழ்வு மிக பிரமாண்டமான முறையில், நடைபெறும்.

நிகழ்வில் உங்களுக்கு பிடித்த பாடல்களை பாடி மகிழ்விப்போம். என்னுடன் பாடல்களை பாடி உங்களை மகிழ்விக்க, எனது மகள் சரண்யா, அக்சயா, ஜீவன் மற்றும் உங்கள் பாடகி கில்மிசா ஆகியோரும் சேர்ந்து காத்திருக்கிறோம்.

மருத்துவ பீட மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக நிதி திரட்டும் இசை நிகழ்வு என்பதனால் நான் ஊதியம் பெறவில்லை. கற்றல் செயற்பாட்டுக்கு என்னால் முடிந்தது. அதே போன்று இசை நிகழ்வுக்கு உங்கள் ஆதரவுகளை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

000

Related posts: