வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக தொழில்நுட்பக் கல்லூரியில் கற்று வெளியேறிய மாணவர்கள் கவனயீர்ப்புப்  போராட்டம்

Wednesday, April 6th, 2016

வடமாகாண தொழில்நுட்பச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில்நுட்பக் கற்கை நெறியைக் கற்று வெளியேறிய மாணவர்கள் தமக்குத்  துறை சார்ந்த வேலை வாய்ப்புக்கள்  வழங்கக் கோரி இன்று புதன்கிழமை (06) காலை  வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்புப்  போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

வடமாகாணத்தில்  மன்னார் , வவுனியா , கிளிநொச்சி, முல்லைத் தீவு,யாழ்ப்பாணம்  என மொத்தம் 300 பேர் இருப்பதாகவும், வடமாகாண தொழில்நுட்ப சங்கத்தில் 190 பேரின் பெயர் விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 2005 ஆம் ஆண்டு தொடக்கம் தாம் இதே கோரிக்கையை வைத்து வந்த போதும் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம் .வடமாகாண சபையின் கவனத்திற்குப் பல தடவைகள் கொண்டு செல்லப்பட்ட போதும் பலனளிக்கவில்லை எனத் தெரிவித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வடமாகாண சபை இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு பெற்றுத் தரவேண்டும். தம்மை நிபந்தனைகள் எதுவுமின்றி சேவையில் நேரடியாக உள்வாங்க வேண்டுமெனவும் கோரிக்கை முன்வைத்தனர்.

கவனயீர்ப்புப் போராட்டத்தின் நிறைவில்  போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாகச் சென்று  தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினைக் கையளித்தனர். றெஜினோல்ட் குரே கொழும்பு சென்ற காரணத்தால் அவர் சார்பாக மகஜரினை பொதுச் சேவைகள் ஆணைக் குழுவின் செயலாளர் திருமதி. ரூபினி வரதலிங்கம் பெற்றுக் கொண்டார். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ். மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் ஆகியோருக்கான  மகஜர்களும் கையளிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை ,வடமாகாண தொழில்நுட்பச் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

985a986d-d959-443f-8379-a6a769e4ba88

Related posts: