பங்களாதேஷை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இலங்கை!

கண்டி, பல்லேகலயில் நேற்று (08) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலமாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினை 2-1 என்ற கணக்கில் சரித்த அசலங்க தலைமையிலான அணி சொந்த மண்ணில் கைப்பற்றியது. முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் இலங்கை 1-0 என்ற கணக்கில் வென்றது.
மூன்றாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணியின் விக்கெட் காப்பாளர் குசல் மெண்டிஸ் சதம் அடித்தார். அதற்காக அவர் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த மோசமான உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின்னர், 50 ஓவர் வடிவ கிரிக்கெட்டில் இலங்கைக்கு இந்த வெற்றி ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக அமைந்தது.
அந்த உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது, அதனால் இந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபிக்கும் அவர்கள் தகுதி பெறவில்லை.
அந்தத் தோல்விக்குப் பின்னர் அவர்கள் ஒன்பது ஒருநாள் தொடர்களில் 07 இல் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா போன்ற பலமிக்க அணிகளை வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.
நேற்யை போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது நான்காவது ஓவரிலேயே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான நிஷான் மதுஷ்க ஒரு ஓட்டத்துடன் தன்சிம் ஹசன் சாகிப்பின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்
பின்னர் களமிறங்கிய குசல் மெண்டீஸுடன் கைகோர்த்த பத்தும் நிஸ்ஸங்க 50 ஓட்டங்களை விஞ்சிய இணைப்பாட்டத்தை உருவாக்கினார். இருப்பினும், அவரும் 35 ஓட்டங்கள் எடுத்த பின்னர் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
நான்காவது இடத்தில் துடுப்பாட்டம் செய்ய வந்த கமிந்து மெண்டீஸ் 16 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்து வெளியேற, அவருக்குப் பின்னர் களமிறங்கிய அணித் தலைவர் சரித்த அசலங்க குசல் மெண்டீஸுடன் கைகோர்த்தார்.
ஒரு பக்கம் குசல் மெண்டீஸ் சர்வதேச ஒருநாள் கிரக்கெட் அரங்கில் தனது 06 ஆவது சதத்தை பூர்த்தி செய்ய, மறுபுறம் அசலங்க அரைசதம் எடுத்தார்.
இருவரும் நான்காவது விக்கெட்டுக்காக 124 ஓட்டங்களை சேர்த்தனர். பின்னர், அணித் தலைவர் 58 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அசலங்கவின் வெளியேற்றத்துடன், அடுத்தடுத்து களமிறங்கிய ஜனித் லியனகே 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
பின்னர், இலங்கையின் இன்னிங்ஸுக்கு நங்கூரமிட்ட குசல் மெண்டீஸ் 114 பந்துகளில் 124 ஓட்டங்களை எடுத்து ஷமிம் ஹொசைனின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த இளம் வீரர் துனித் வெல்லலகேயும் 6 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினார்.
அவரது அதிரடி ஆட்டத்தால் இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 285 ஓட்டங்களை குவித்தது.
பங்களாதேஷ் அணி தரப்பில் மெஹிடி ஹசன் மிராஸ் மற்றும் டாஸ்கின் அகமட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், தான்சிம் ஹசன் சகிப், தன்வீர் இஸ்லாம் மற்றும் ஷமிம் ஹொசைன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
286 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு தொடக்கம் மிகவும் மோசமாக இருந்தது. அந்த அணி 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டான்சித் ஹசன் தமீம் 17 ஓட்டங்களுடனும், அடுத்து வந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ டக்கவுட்டுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
பின்னர் பர்வேஸ் ஹசன் எமோன், அடுத்து களறமிஙக்ய தௌஹித் ஹிரிடோய் உடன் இணைந்து 42 ஓட்டங்களை சேர்த்தார். இருந்தாலும், எமோனும் 28 ஓட்டங்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
இதனால், 62 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது பங்களாதேஷ். டோஹித் ஹிரிடோய் அரைசதமும் தொடர்ச்சியான விக்கெட் இழப்புகளும்
பின்னர், டோஹித் ஹிரிடோய் அரைசதம் அடித்தார், ஆனால் அணித் தலைவர் மெஹிடி ஹசன் மிராஸ் 28 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷமிம் ஹொசைன் 12 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.
அணியின் ஓட்ட எண்ணிக்கை 153 ஆக இருந்தபோது ஹிரிடோயும் பெவிலியன் திரும்பினார். விக்கெட் காப்பாளர் ஜாகர் அலி அணியை மீட்கப் ஓரளவு போராடினார்.
ஆனால், தன்சிம் ஹசன் சாகிப் 5 ஓட்டங்கள், டாஸ்கின் அகமட் ஒரு ஓட்டம் மற்றும் தன்வீர் இஸ்லாம் 8 ஓட்டங்கள் எடுத்து அவருக்கு முன்னால் பெவிலியன் திரும்பினர். தொடர்ந்து, ஜாகிர் 27 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியாக பங்களாதேஷ் அணி 39.4 ஓவர்களில் 186 ஓட்டங்களுக்கு சகல விகெட்டுகளையும் பறிகொடுத்தது.
இலங்கை அணிக்காக அசிதா பெர்னாண்டோ மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
துனித் வெல்லலகே மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இறுதியாக முதல் மற்றும் மூன்றாவது போட்டிகளில் வெற்றி பெற்று இலங்கை ஒருநாள் தொடரை 2-1 என வென்றது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது.
அதே நேரத்தில் முதல் டெஸ்ட் போட்டி சமனிலையில் முடிந்தது.
இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி:20 தொடர் ஜூலை 10 முதல் பல்லேகலேயில் தொடங்கும்
000
Related posts:
|
|