சீரற்ற வானிலையால் இதுவரையில் 17 பேர் உயிரிழப்பு: 2 இலட்சத்து 71 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Monday, June 7th, 2021

சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்த நிலைமை படிப்படியாக குறைந்து வருவதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடும் மழையை தொடர்ந்து அதிகரித்த ஆறுகளில் நீர்மட்டம் தற்போது குறைந்து வருகிறது. எனினும் களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, கண்டி, குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்தும் இருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை ,அனர்த்த நிலைமை படிப்படியாக குறைந்து வருகின்ற போதிலும் ஆறுகளில் மேற்பகுதி நீரேந்து பிரதேசங்களில் தொடர்ந்தும் மழை பெய்தால் அது தொடர்பில் அவதானமாக இருக்கும் படி நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ். ஜி.வி. சுகிஸ்வர பொதுமக்களை கேட்டுள்ளார்.

இதனிடையே நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 5 பேர் காயமடைந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம், 10 மாவட்டங்களின் 88 பிரதேசங்களிலுள்ள 67 ஆயிரத்து 613 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 71 ஆயிரத்து 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 2 பேர் காணாமல் போயுள்ளனர் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

பாதிப்புக்குள்ளானவர்களில் 6 ஆயிரத்து 177 குடும்பங்களைச் சேர்ந்த 26 ஆயிரத்து 806 பேர் 106 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் 5 ஆயிரத்து 710 குடும்பங்களைச் சேர்ந்த 22 ஆயிரத்து 975 பேர் தங்களது உறவினர்களது வீடுகளில் தஞ்சமடைந்திருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த அனர்த்தங்களால் 17 வீடுகள் முற்றாகவும் 978 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: