பலாலியிருந்து சென்னைக்கான விமானசேவை கைவிடப்பட்டது ?

Thursday, August 29th, 2019

பலாலி விமான நிலையம் புனரமைக்கப்பட்டு எதிர்வரும் ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் இந்திய பிராந்திய நகரங்களுக்கு விமான சேவையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், பலாலியிருந்து சென்னைக்கு விமான சேவைகள் இடம்பெறாது என இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கும்போது, நான்கு இந்திய நகரங்களுடனான இணைப்புகளைக் கொண்ட இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக மாறும். இருப்பினும், தமிழ் நாட்டின் சென்னை விமான நிலையத்திற்கு பலாலியிருந்து விமான சேவை இடம்பெறாது.2.5 பில்லியன் செலவில் புனரமைக்கப்படும் பலாலி விமான நிலைய திட்டத்திற்கு இந்தியா 300 மில்லியனை வழங்குகிறது.

ஒக்ரோபர் 15 இல் விமான நிலையம் திறக்கப்படும்போது, சிறிய வணிக விமானங்கள் பெங்களூர், கொச்சி, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களிற்கு சேவையை ஆரம்பிக்கும். எனினும், சென்னைக்கு விமான சேவையை ஆரம்பிப்பாதது கொழும்பின் பொருளாதாரத்தை பேணுவதற்கு என கருதப்படுகிறது.

யாழ்ப்பாணம் செல்லும் புலம்பெயர்ந்த தமிழர்கள் சென்னையில் பொருட்களை கொள்வனவு செய்து கொண்டு யாழ்ப்பாணம் செல்லக்கூடும், இதனால் கொழும்பு வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதாலேயே சென்னைக்கான சேவை இடம்பெறவில்லையென கூறப்படுகிறது.

Related posts: