நயினாதீவு பெருந்திருவிழா கால போக்குவரத்து சேவைக்கு 42 படகுகளுக்கே அனுமதி – மீறினால் நடவடிக்கை – யாழ்.மாவட்ட செயலகம் அறிவிப்பு!
Thursday, June 11th, 2026
…..
நயினாதீவு பெருந்திருவிழா காலத்தில் பயணிகள் படகுச் சேவையை 42 படகுகளே முன்னெடுக்க முடியும் என்று அறிவித்துள்ள யாழ் மாவட்ட செயலகம் அவற்றைத் தவிர வேறு படகுகளில் பக்தர்களை ஏற்ற முடியாது எனவும், அவ்வாறு வேறு படகுகளில் ஏற்றினால் பொலிஸாரின் நடவடிக்கை உட்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று இன்று(10) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே இவ்வாறு அறிவிக்கப்பட்டது.
குறித்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய விடயங்களாக –
திருவிழாவிற்காக 42 தனியார் படகுகள் தயார் நிலையில் உள்ளதாகவும், அதனை வணிக கப்பல் துறை செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர் தலைமையிலான குழு பரிசீலனை மேற்கொள்ளவதுடன் இந்த 42 படகுகளை தவிர வேறு படகுகளில் பக்தர்களை ஏற்ற முடியாது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் படகோட்டிகள் மது பாவனையில் இருந்தால் படகும் அதன் ஓட்டுனரும் மூன்று மாதங்களுக்கு அப் படகினை ஓட்டுவதற்கு தடை விதித்தல் எனவும், இதற்கு படகு உரிமையாளர் சங்கம் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் நயினாதீவு பிரதேசத்தில் ஒலிபெருக்கி மூலம் – படகுகளில் பயணிக்கும் போது உயிர்காப்பு அங்கி அணியாது பயணிப்பது தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும், மதுபோதையில் படகுகள் செலுத்துவது தண்டனைக்குரிய குற்றம் எனவும் மக்கள் சமூக பொறுப்புடன் செயல்படுமாறும் அறிவிக்குமாறு பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.
குறிப்பாக படகுகளில் பக்தர்கள் உயிர்காப்பு அங்கிகள் அணியாது பயணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன், பயன்படுத்தப்படும் உயர்காப்பு அங்கிகள் பாவணைக்கு உகந்தவையா எனவும் வேலணை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ், கடற்படை ஆகியோர் இணைந்து பரிசீலனை செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
இதேநேரம் சாரணர்களின் சேவைகளை பெற்றுக்கொள்வது மற்றும் இறுதி இரு திருவிழாவிற்கும் யாழ்ப்பாண மாவட்ட சாரணர்களின் சேவைகளை பெற்றுக்கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் குறிகாட்டுவானிலிருந்து ஆலயம் செல்வதற்கான படகு போக்குவரத்து ஒரு வழிக் கட்டணம் 100.00 ரூபாய் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்தோடு கடற்போக்குவரத்து (படகு) நயினாதீவிலிருந்து காலை 6.00 மணிக்கும் குறிகட்டுவானிலிருந்து காலை 6.30 மணிக்கும் போக்குவரத்து சேவை நடைபெறவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் குறிகட்டுவான் துறைமுகத்தின் உள்நுழைவு வரை வாகனங்கள் தரித்து நிற்பதனை தடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இதநிடையே நயினாதீவுக்கு கட்டடப் பொருட்களை குறிப்பாக கல் மற்றும் மணல் என்பவற்றை எடுத்துச் செல்வது குறிகட்டுவானிலிருந்து பி. ப 4.00 மணிக்கு பின்னர் ஏற்றலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
முக்கியமாக யாசகம் பெறுவோர் மற்றும் சிறுவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுத்துவதை கண்காணிப்பதற்கு முதல் 10 திருவிழாக்களுக்கும் ஒரு நாளுக்கு மூன்று பேரும் இறுதி ஐந்து திருவிழாக்களுக்கும் ஆறு பேருமாக பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர், நன்னடத்தை உத்தியோகத்தர், உளவளத்துணை உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர் உள்ளடங்கியவகையில் உத்தியோகத்தர்கள் கண்காணிப்பு கடமையில் ஈடுபடுத்தல் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் தனியார் மற்றும் அரச சேவை வீதிப்போக்குவரத்து சேவை கட்டணம் ரூபா 184.00 எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் கோயில் கோபுரத்திற்கு முன்பக்கமாக தனியார் கடைகள், தாகசாந்தி நிலையம் அமைப்பதனை தவிர்க்குமாறு பிரதேச சபைக்கு அறிவுறுத்தப்பட்டது
அத்துடன் குடிநீர் தேவைப்பாடுகள், வைத்திய சேவை, சுகாதாரம், மின்சாரத் தேவை, அம்புலன்ஸ் சேவை, இலங்கை செஞ்சிலுவை மற்றும் சென் ஜோன்ஸ் படையினர் சேவை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


