கிளீன் வலி வடக்கை உருவாக்க ஈ.பி.டி.பி உறுப்பினர் சிறீதரன் ஆலோசனை!

வலி வடக்கில் அவசியமான இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு குப்பை சேகரிக்கும் தொட்டிகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பா. சிறீதரன், பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்கள் அனைத்து உறுப்பினர்களினதும் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று(18.09.2025) இடம்பெற்ற நிலையில், அங்கு உரையாற்றும் போது ஈ பி.டிபி. உறுப்பினரினால் குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், “மக்களினால் வீதிகளில் குப்பைகள் வீசப்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இதுதொடர்பாக இந்த சபை கூடிய அக்கறை செலுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.
பிரதேச சபையினால் குப்பைகள் சேகரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், அவை நேர்த்தியான பொறிமுறையில் முன்னெடுக்கப்படாமையும், மக்களுக்கு போதிய தெளிவின்மையுமே வீதிகளில் குப்பைகள் வீசப்படுகின்றமைக்கு காரணமாக இருக்கின்றது.
எனவே, முக்கியமான இடங்களை அடையாளப்படுத்தி குப்பை தொட்டிகளை அமைப்பதுடன், குப்பை அகற்றல் செயற்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துதற்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும். அதன்மூலம் எமது பிரதேசத்தினை சுத்தமானதாக – கிளீன் வலி வடக்காக மாற்ற முடியும்.
அதேபோன்று, சபைக்கு கிடைக்கும் வருமானங்களையும், சபையூடாக வரும் அபிவிருத்திகளையும் அனைத்து வட்டாரங்களுக்கும் பகிருவதன் ஊடாக ஆரோக்கியமான அபிவிருத்தியையும் அடைய முடியும் என்பதுடன்,
சபையினூடக நடைபெறுகின்ற அனைத்து வட்டார நிகழ்வுகம் வேலைத்திட்டங்களும் சபையின் அனைத்துக் கௌரவ உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தப்படுமானால் ஆரோக்கியமான கூட்டுச் செயற்பாட்டினை ஏற்படுத்த முடியும்” என்றும் வலியுறுத்தினார்.
Related posts:
|
|