அநுர ஆட்சியில் வரவு செலவு திட்டத்தை சமப்படுத்த ஒவ்வொருவரிடமிருந்தும் 136 ஆயிரம் ரூபாய் மேலதிக வரியை அறவீடு செய்ய நேரிடும் – முன்னாள் அமைச்சர் பாட்டலி எச்சரிக்கை!

Friday, January 3rd, 2025

 

இந்த ஆண்டின் வரவு செலவு திட்டத்தை சமப்படுத்துவதற்கு இலங்கையில் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு இலட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மேலதிக வரியை அறவீடு செய்ய நேரிடும் என்று முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க(Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் வரி முறைமை நாட்டு மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தக் கூடியது எனவும் அது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், புதிய அரசாங்கத்தின் வரி விதிப்பு நடைமுறையினால் பொது மக்களுக்கு பெரும் சுமை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் வரி முறை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு நிகரானது.  

இது புதிய அரசாங்கத்தின் வரிக்கொள்கையாக கருதப்பட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வரிமுறையினால் தொழில் வல்லுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொழில் வல்லுநர்கள் மீது மட்டும் வரி விதிப்பதனால் வரி வருமானம் அதிகரிக்கப்படாது. சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தங்கள் காரணமாக இந்த வரி கொள்கை நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 

தேர்தலுக்கு முன்னதாக சர்வதேச நாணய நிதியத்துடன் நாட்டுக்கு நன்மை ஏற்படக்கூடிய நிபந்தனைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஆளும் கட்சியினர் குறிப்பிட்டிருந்தனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும்போது இந்த ஆண்டில் அரசாங்கத்தின் வரி இலக்கு அடையப்பட வேண்டுமாயின் ஒவ்வொருவரிடமிருந்தும் சராசரியாக 136,000 ரூபா வரி அறவீடு செய்ய வேண்டியுள்ளதாகவும் சம்பிக்க ரணவக்க இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: