மகாராணியின் தகவல்களை ட்விட்டரில் பகிர்ந்தால் ஒரு கோடி இலங்கை ரூபாய் ஊதியம்!

Friday, April 29th, 2016

பிரித்தானிய மகாராணி வெளியிடும் தகவல்களை சமூக வலைத்தளங்களில்  பகிரும் நபருக்கு ஒரு கோடி இலங்கை ரூபாய் சம்பளமாக அளிக்க உள்ளதாக பிரித்தானிய அரண்மனை அதிகாரப்பூர்வமாக விளம்பரம் வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய அரண்மனை தனது அதிகாரப்பூர்வமான இணையத்தளத்தில் சில தினங்களுக்கு முன்னர் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத் வெளியிடும் தகவல்களை உடனுக்குடன் சமூக வலைத்தளங்களான டுவிட்டர், மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களில் பகிர்வதற்கு அனுபவம் வாய்ந்த ஊழியர் ஒருவரை தெரிவு செய்ய உள்ளோம்.

இந்த வேலைவாய்ப்பில் தெரிவாகும் நபருக்கு ஒரு வருடத்திற்கு 47,400 பவுண்ட் (1,00,99,215 இலங்கை ரூபாய்) ஊதியமாக அளிக்கப்படும்’ என அந்த விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலையில் சேருவதற்கு தேவையான முக்கிய தகுதி என்னவென்றால், ஊழியர் சமூக வலைத்தளங்களை வேகமாகவும் சிறப்பாகவும் கையாளுபவராக இருக்க வேண்டும்.

தற்போது மகாராணியின் டுவிட்டர் கணக்கில் 20 லட்சம் பேரும், இன்ஸ்டகிராம் பக்கத்தில் 3 லட்சம் பேரும் பின் தொடர்கின்றனர்.

இந்த வேலைக்கு தெரிவாகும் நபர் பகிரும் ஒவ்வொரு தகவலும் இவர்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பது முக்கியமாகும்.

மேலும், இதற்கு முன்னதாக அந்த நபர் உலக பிரபலங்களின் இணையத்தளங்கள் அல்லது சமூக வலைத்தளங்களை கையாண்டவராக இருக்க வேண்டும்.

அதே போல், பிரித்தானிய மகாராணியின் தகவல்கள் என்பதால், சிறு பிழை இல்லாமல் தகவல்களை உடனுக்குடன் பகிர வேண்டும் என அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கு தெரிவாகும் ஊழியருக்கு சில சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

  1. ஆண்டுக்கு வங்கி விடுமுறைகள் உள்ளிட்ட 33 விடுப்புகள் எடுத்துக்கொள்ளலாம்.
  2. கட்டணம் இல்லாத மதிய உணவு அளிக்கப்படும்.
  3. பணி வழங்குபவர் 15 சதவிகித ஓய்வூதியமும் வழங்குவார்.
  4. பணியில் சேருவதற்கு முன்னதாக பிரத்யேக பயிற்சிகளும் வழங்கப்படும்.
  5. உலகம் முழுவதும் பிரபலமாக வாய்ப்பு உள்ளிட்ட சலுகைகளும் அறிக்கப்பட்டுள்ளன.

ஆனால், துரதிஷ்டவசமாக இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 24ம் திகதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஊழியர் தெரிவாகியுள்ளாரா இல்லை என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகாததால் இதுபோன்ற மற்றொரு அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என அரண்மனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: