மாணவச் செல்வங்களுக்கு அன்பை மட்டுமல்ல நற்பண்பையும் ஊட்டி வளர்க்க வேண்டும் – குப்பிளானில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

பாலகப் பருவத்திலேயே கல்வியுடன் விளையாட்டை மட்டும் போதிக்காது மாணவச் செல்வங்களுக்கு அன்பையும் ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்பையும் ஊட்டி வளர்ப்பதன் ஊடாகவே வளமானதொரு எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ள முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
குப்பிளான் தெற்கு, ஞானகலா மழலைகள் கல்விப்பூங்காவின் வருடாந்த விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் யுத்த சூழலுக்குள்ளும் பல்வேறு நெருக்கடிகளுக்கும் மத்தியில் எமது சமூகம் கல்வி கற்க வேண்டியதொரு சூழல் இருந்து வந்தது. ஆனால் தற்போது அந்த நிலைமை மாற்றம் கண்டு ஓரளவு இயல்புச் சூழல் உருவாகியிருக்கிறது.
நெருக்கடியான யுத்த சூழலுக்குள்ளும் அச்சமான பதற்றமான நிலமையிலும் எமது மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்றிருந்தார்கள்.
ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்த போதிலும் கூட மாணவர்களால் தற்போது சிறப்பானதொரு கல்வி நிலையை அல்லது பெறுபேறுகளை ஈட்ட முடியாமல் இருக்கும் நிலையானது மிகவும் வேதனை தருகிறது.
2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபையை கைப்பற்றிக் கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் மலர்ந்தது தமிழர் ஆட்சி என்று கொக்கரித்தார்கள். ஆனால் 2013 ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக 5 ஆண்டு காலமாக வடக்கு மாகாண சபையை தமது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்ததனூடாக அவர்களால் எதனை சாதிக்க முடிந்தது.
அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் வடக்கு மாகாணம் கல்வியில் மட்டுமல்லாது சகல துறைகளிலும் பெரும் பின்னடைவுகளை சந்தித்திருப்பதை அவர்களே இன்று வெளிப்படையாக ஏற்றுக்கொள்கின்றனர். மக்கள் நலன்சார்ந்து உழைப்பதற்கும் அதனை செயற்படுத்துவதற்கும் அக்கறையும் ஆற்றலும் உள்ளவர்களால் மட்டுமே சாதிக்க முடியும்.
ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் அவர்களிடம் ஆற்றலும் அக்கறையும் இல்லை என்பதை வடக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் மட்டுமல்லாது நிகழ்காலத்திலும் அவர்களது செயற்பாடுக@டாக மக்கள் தற்போது உணர்ந்து கொண்டுள்ளனர்.
எனவே எதிர்காலத்தில் மக்களுடன் நின்று மக்களுக்காய் உழைப்பவர்களையே தமது அரசியல் தலைமையாக தெரிவு செய்வதன் ஊடாகவே மக்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் உரிய முறையில் தீர்வு காண முடியும் என்று இதன்போது சுட்டிக்காட்டினார். முன்னதாக ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட அதிதிகள் மழலைகளின் இசை அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து வருடாந்த விளையாட்டு விழா சிறப்புற நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|