மண்டிகைக் குளப்பிரதேசம் சுற்றுலாத்தளமாவது கனவா?திட்டம் அனுமதிக்கப்டவில்லை என்கிறார் பிரதேச செயலர்

Thursday, March 28th, 2019

யாழ்ப்பாணம்  சங்கானைப்பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மண்டிகைக்குளத்தை நவீன சுற்றுலாத்தளமாக மாற்ற சங்கானைப்பிரதேச செயலகம் எடுத்த முயற்சி படு தோல்வியில் முடிந்துள்ளது.

நவீன சுற்றுலாத்தளமாக்குவோம் என்று மார்பு தட்டிய பிரதேச செயலரே அதற்கான அனுமதிகள் கிடைக்கப்படவில்லை என்று கைவிரித்தார்.

பழமை வாய்ந்த விவசாயக்குளங்களில் ஒன்றான சங்கானை மண்டிகைக் குளம் கடந்த 50 வரருடங்களுக்கு மேலாக மீள் சீரமைப்பு இன்றி அழிவடைந்த நிலையில் இருந்தது. கழிவுகள் நிரம்பி நீர் தேங்குவதற்கு வசதிகள் அற்ற நிலையிலும் காணப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் மண்டிகைக்குளத்தை மறு சீரமைப்பு செய்வதற்காக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க செயலணியால் 4 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. அந்த நிலையில் மண்டிகைக்குளம் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றது. அந்தக்குளத்தை சுற்றுலாத்தளமாக்குவதற்கான திட்டங்களை வலி. மேற்கு செயலகம் முன்னெடுத்தது.

மண்டிகைக்குளப்பிரதேசம் முதன்மை வீதியுடன் இணைப்பாக உள்ளது. இந்தப்பிரதேசம் நவீன சுற்றுலாத்தளமாக மாறவேண்டும் எனச் சங்கானை பொது அமைப்புக்களும்  விவசாய சம்மேளனப்பிரதி நிதிகளும், வர்த்தகர்களும் பொது மக்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். 2018 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்த முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா பண்டார நாயக்க மண்டிகைக்குளத்தின் நீர்ப்பாசனத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.  அந்த நிகழ்வில் சங்கானை பிரதேச செயலரால் மண்டிகைக்குளத்தை சுற்றுலாத்தளமாக்கும் முன் மொழிவு ஒன்று சந்திரிக்காவிடம் கையளிக்கப்பட்டது.

நவீன சுற்றுலாத்தளமாக மாற்ற 20 மில்லியன் ரூபா நிதியைக் கோரியே வலி. மேற்கு பிரதேச செயலர் பொன்னம்பலம் பிறேமினி கையொப்பம் இட்டமுன்வரைவுப்பத்திரத்தைக் கையளித்தார். அதன் பின்னர் நடந்த விவசாயக்குழுக் கூட்டம் ஒன்றில் மண்டிகைக்குளம் சுற்றுலாத்தளமாக மாறுவது தொடர்பில் விவசாயிகள் விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த பிரதேச செயலர் இந்தத்திட்டத்தை முன் நகர்த்துவது தொடர்பில் கமநல உதவி ஆணையாளரின் உதவி ஒத்தாசையுடனும் ஏனைய அரச நிறுவனங்களின் உதவியுடனும் குளத்தை நவீன சுற்றுலாத்தளமாக மாற்றுவோம்” என்று தெரிவித்தார். இந்த நிலையில்  அந்தத்திட்டத்துக்கான அனுமதிகள் எவையும் கிடைக்கவில்லை என பிரதேச செயலர் கைவிரித்தார்.

Related posts: