பட்டமளிப்பை உடன் நடத்தக் கோருகின்றனர் பல்கலை மாணவர்கள்!

Thursday, March 15th, 2018

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கற்றல் நடவடிக்கைகள் நிறைவடைந்து ஒரு வருடமாகியும் பட்டமளிப்பு நடக்கவில்லை. இவ்வாறு இழுத்தடிக்கப்படுவது சிறந்த வேலையையும் பெறமுடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு பட்டமளிப்புக்காகக் காத்திருக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்ததோடு விரைவில் பட்டமளிப்பை நடத்துமாறும் கோரியுள்ளனர். இது தொடர்பிலான கோரிக்கைக் கடிதங்களும் அனுப்பப்படுகின்றன. அவற்றில் அவர்கள் கோரியுள்ளதாவது:

கடந்த வருட மாணவர்களுக்கு கடந்த ஏப்ரலுடன் கற்றல் நடவடிக்கைகள் நிறைவடைந்தன. அடுத்த மாதம் ஒரு வருடமாகிறது. பட்டமளிப்பு இன்னும் இடம்பெறவில்லை. சில பரீட்சைப் பெறுபேறுகள் ஒருவருடமாகும் நிலையில் இன்னும் வெளியிடப்படவில்லை.

தொழில் வாய்ப்புகளுக்குக் கோருகின்ற விண்ணப்பங்களுக்கான தரவுகளுக்கு பட்டச் சான்றிதழைப் பெறமுடியவில்லை. பரீட்சைப் பிரிவும் விஞ்ஞான பீடமும் இது விடயத்தில் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். வருட இறுதியில் பட்டமளிப்பு இடம்பெறுவது வழமை. இதுவரை காலமும் ஒரே தடவையில் நடத்தப்பட்டு வந்த பட்டமளிப்பு கடந்த வருடம் இரு தடவைகளில் நடத்துவது என்று கூறி ஒரு பகுதியினருக்கு கடந்த வருட இறுதியில் பட்டமளிப்பு நிறைவடைந்தது.

விஞ்ஞான பிரிவினருக்கான பட்டமளிப்பு இந்த மாதம் 22 ஆம் திகதி நடத்தப்படும் என்று அறிவித்தும் அது பிற்போடப்பட்டுள்ளது.

பரீட்சை இடம்பெற்று பெறுபேறுகள் விரிவுரையாளர்களின் நிர்வாகத்தினரின் அலட்சியம் காரணமாக உரிய காலத்தில் வெளியிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டமளிப்பு விழா பிற்போடப்பட்டமைக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரின் போராட்டம் காரணம் என்று நிர்வாகம் குற்றஞ்சாட்டுகின்ற போதும் ஊழியர் சங்கம் அதனை மறுத்துள்ளது. பட்டமளிப்பு நடத்துவதற்குத் தேவையான சகல பணிகளையும் செய்ய தாம் தயாராகவே இருப்பதாக சங்கம் கூறுகிறது.

இது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரனுடன் தொடர்பு கொண்ட போது பட்டமளிப்பை திரும்ப எப்பொழுது நடத்துவது என்று பல்கலைக்கழகப் பேரவைக் கூட்டத்திலேயே தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Related posts: