ஆலோசனைக்கேற்ப பணியாற்றாவிடின் சட்ட நடவடிக்கை  – நீதிபதி இளஞ்செழியன்

Thursday, March 17th, 2016

யாழ். மாவட்டத்தில் பணிபுரியும் தலைமை அதிகாரிகள் மாவட்ட செயலாளர், முதலமைச்சர், ஆளுநர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக்கு அமையவே பணியாற்ற வேண்டும். இல்லையேல் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனியார் பஸ், போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஆகியவற்றுக்கு இடையிலான ஒருங்கிணைந்த நேர அட்டவணை தயாரிப்பது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரினால் பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டு வந்த நிலையில், பிராந்திய முகாமையாளர் ஒத்துழைப்பு வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வந்துள்ளார்.

இது தொடர்பில் மேல் நீதிமன்ற நீதிபதி என்ற வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டச் செயலாளரால் நீதிபதி இளஞ்செழியனுக்கு கடிதம்  அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், போக்குவரத்து சபை ஊழியர்; ஒருவரை தற்காலிக பணியில் இருந்து இடைநிறுத்தியமை தொடர்பான மேன்முறையீட்டு வழக்கு மீதான விசாரணை புதன்கிழமை (16) மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, கோண்டாவில் சாலை முகாமையாளர்; என்.குணபாலசிங்கம், மற்றும் பிராந்திய முகாமையாளர் உபாலி சிறிவர்தன ஆகிய இருவரும் மன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது நீதிபதி தெரிவிக்கையில் –

மாவட்டச் செயலாளருக்கு கட்டுப்படாத நீங்கள் யாருக்கு கட்டுப்படுவீர்கள்? பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளான நீங்களே இவ்வாறு செயற்பட்டால் உங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகள் எவ்வாறு செயற்படுவார்கள்? நீங்கள் இலாபத்துக்கு போட்டிபோட்டு ஓடி மேலதிக பணம் வசூலிக்க நினைக்கிறீர்கள்.

வடமாகாணத்தில் போட்டி போட்டு ஓடும் போக்குவரத்து சபை பேருந்தினால் விபத்து ஏற்படுமாக இருந்தால் இருவரும் நீதிமன்றுக்கு வரவேண்டி ஏற்படும் என்றார்.

‘மாவட்டச் செயலாளர் என்பவர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டிணைந்த திணைக்களங்களுக்கும் பொறுப்பான அதிகாரி. நீதிமன்றம் எதை சொல்கிறதோ அதை தான் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் ‘யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் நுழையும் போக்குவரத்து சபை பஸ்கள் அனைத்தும் 30 கிலோ மீற்றர் வேகத்திலேயே வரவேண்டும். கைதடிப்பாலம், பண்ணைப்பாலம்,காங்கேசன்துறை பகுதியினை அண்மித்து வரும் வரும் பேருந்துகள் குறித்த வேகத்தில் நுழைய வேண்டும்’ எனவும் அறிவுறுத்தல் விடுத்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: