தேசிய கல்வி ஆணைக்குழு செயற்திறன் மிக்கதாக செயற்பட்டிருந்தால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்க முடியும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்..பி!

Friday, November 17th, 2017

தேசிய கல்வி ஆணைக்குழுவானது செயற்திறன் மிக்கதாக செயற்பட்டிருந்தால், இன்று இந்த நாட்டில் நிலவிவருகின்ற பல்வேறு பிரச்சினைகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருக்காது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் அடங்கலாக 24 நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி மைத்திரிபாலவும் நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகி இருந்து உரைகளைக் கெட்டுக்கொண்டிருக்கையில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய செயலாளர் நாயகம் அவர்கள்-

குறிப்பாக, எமது நாட்டக்கு அவசியமான கல்விக் கொள்கையுடன் செயற்பட்டிருந்தால், எமது நாட்டில்  இனங்களுக்கிடையிலான சந்தேகங்கள், முரண்பாடுகள், தொழில்வாய்ப்பின்மை, சமூகங்களின் மத்தியில் நாட்டுப் பற்றின்மை போன்ற பல்வேறு அடிப்படை காரணிகளை அகற்றக்கூடியதாக இருந்திருக்கும். அந்த வகையில் இந்த ஆணைக்குழு தனது பணிகளை மேற்கொள்வதற்கு தவறியுள்ளது என்றே கருத வேண்டியுள்ளது.

எமது நாட்டுக்கு தேசிய கல்வி முறைமையொன்று தேவை. ஆரம்பத்திலிருந்தே தமிழ் மாணவர்கள் சிங்கள மொழியைக் கற்பதற்கும், சிங்கள மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்பதற்குமான பலமான ஏற்பாடுகள் அவசியமாகும். இந்த நாட்டில் ஒன்றாக வாழுகின்ற சகோதர மக்களாகிய தமிழ் மக்களும், சிங்கள மக்களும் தங்களது உணர்வுகளை – கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்காக அந்நிய ஆங்கில மொழியையே பயன்படுத்த வேண்டியிருப்பதும், அதுவும் தெரியாத நிலையில் ஊமைகளாக இருக்க வேண்டி இருப்பதுவும் துரதிஸ்டவசமான நிலைமைகளாகும்.

அந்த வகையில் இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களும் இலங்கையர்களே என்ற உணர்வினை ஏற்படுத்தும் வகையிலும், நவீன தொழில்நுட்ப உலகின் தொழில் கேள்விகளுக்கு ஏற்றவாறும் சரியானதும், நிலையானதுமான கொள்கைகள் வகுக்கப்பட்டு, எமது கல்வித் துறையினை முன்னேற்றுவதற்கு உழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்.

Related posts: