நக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்! பாகம் மூன்று ….!

Saturday, July 9th, 2016

புலிகளின் தலைவர் பிரபாகரனின் தகவலோடு  கொழும்புக்கு புறப்பட தாயாரான தூதர்கள்!…

ஒரு துயரம்….

இத்தொடரை எழுதிக்கொண்டிருக்கும் போதேதொடரின் பாத்திரம் ஒன்று மறைந்து விட்டது. அது தோழர் சந்திரமோகன்,…..தொடரின் பாத்திரம் மட்டுமல்ல ஈழவிடுதலைப்போராட்டத்தின்
காத்திரமான ஒரு ஆரம்ப பங்காளி. ஏற்கனவே இத்தொடரில் வந்தது போல் ஈழ விடுதலை இயக்கத்தின் (ஈ.எல்.ஓ )தலைமைக்குழு உறுப்பினர்.அதன் ஸ்தாபகர்களில் இவரும் ஒருவர்.
எரிமலை பத்திரிகையை வெளியிட்டவர்களில்  ஒருவர்.

இளைஞர் பேரவையிலும் இவர் இருந்தவர். ஈ.பி.டி.பி யின் தேர்தல் பிரசாரங்களின் போது மேடைகள் தோறும் ஏறி முழங்கியவர். தண்ணீர் விட்டா வளர்த்தோம்?.. சர்வேசா!இப்பயிரை கண்ணீராலும் செந்நீராலும் வளர்த்தோம்… இளசுகளுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பழசுகளுக்கு ஓரளவு தெரியும்  உரிமை போராட்டத்தின் ஆரம்பவலி என்னவென்று… தியாகிகளின் சமாதிகளே  ஆராதனைக்குரிய ஆலயங்கள்!…. தோழர் சந்திரமோகனுக்கு முதலில் அஞ்சலி செலுத்தி இப்பதிவை தொடர்கிறேன்…..

சந்திரமோகனும் பொன் மதிமுகராஜாவும் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டு பொட்டம்மானோடும் நடேசனோடும் பேச ஆரம்பித்தனர். பேச ஆரம்பித்ததும் புலிகளின் காவல் நிலையம் முன்பாக ஒரு பிக்கப் வாகனம் வந்து நின்றது.

அந்த வாகனத்தில் வந்தவர்கள் எல்லோரும் காவல் நிலையத்தின் உள்ளே வரவில்லை. வந்தவர்களில் பலரும் வெளியே காத்திருக்க ஒருவர் மட்டும் உள்ளே வந்தார், உள்ளே வந்தவரை கண்ட புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மான் எழுந்து சென்று விட்டார்.

அங்கு உள்ளே வந்தவர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அனுப்பிய ஆளாக இருக்க வேண்டும்.அவர் யார் என்று தெரியாது. ஆனாலும் அவரை பொட்டம்மான் தனியறை ஒன்றிற்கு தனியாக பேச அழைத்து சென்று விட்டார். விடுதலைப்புலிகளின் காவல் துறை பொறுப்பாளர் நடேசன் மட்டும் அந்த இருவரோடும் பேசிக்கொண்டிருந்தார்.

பொட்டம்மான் வரும் வரைக்கும் முக்கிய விடயங்களை பேசக்கூடாது என்பதாலோ என்னவோ நடேசன் நாட்டு நடப்புகள் குறித்து சந்திரமோகனுடனும் மதிமுகராஜாவுடனும் பேசிக்கொண்டிருந்தார். அரசியல் நிலவரங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?.. கேட்டார் நடேசன்.

சந்திர மோகனும் மதிமுகரஜாவும் ஆளை ஆள் பார்த்துக்கொண்டனர். பூனைக்கு மணி கட்டுவது யார் என்பதுதான் இருவருக்கும் உள்ளே எழுந்த கேள்வி.

இருவர் சார்பாகவும் சந்திரமோகன் பேச முற்பட்டார். நாங்கள் தமிழ் மக்களின் விடுதலையை நேசிக்கின்றோம். ஆனாலும் சந்திரிகா அரசு அரசியல் தீர்வொன்றை இப்போது முன் வைத்திருக்கிறது.

காணி கல்வி நிதி நீதி பொலிஸ் அதிகாரங்களுடன்  வடக்கு கிழக்கு இணைப்பு, பிராந்தியங்களில் சுயாட்சி என்று….. அது நல்ல தீர்வுதானே என்று பலரும் பேசுகிறார்கள் என்றார் சந்திரமோகன்.

அதற்கு நடேசன் எதோ பதிலலிக்க எத்தனித்த வேளை பார்த்து அங்கு திரும்பவும் வந்தார் பொட்டம்மான். சில நிமிடங்களில் திரும்பி வந்த பொட்டம்மான் சந்திரமோகனையும் பொன்மதிமுகராஜாவையும் பார்த்து உரையாடத்தொடங்கினார்.

இராணுவம் யாழ் குடாநாட்டை பிடிக்க முயற்சி எடுக்குது. அதற்கான திட்டங்களையும் வகுத்து விட்டது. இது தெரியுமா என்று கேட்டார் பொட்டம்மான்.

தூதர்கள் இருவரும் மௌனமாக இருக்க பொட்டம்மான் தொடர்ந்து பேசினார். எங்களுக்கு எல்லா தகவல்களும் வந்திருக்கு. எதையும் எதிகொள்ள நாம் தயார். ஆனாலும் இந்த நேரத்தில் பாரிய போர் நடவடிக்கை ஒன்றை தலைவர் தவிர்க்க விரும்புகிறார்.

ஆகவே யாழ் நோக்கிய இராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும். அதற்காக நீங்கள் இருவரும் டக்ளசுடன் (தேவானந்தா ) பேசி சந்திரிகா அரசு இத்திட்டத்தை கைவிட வைக்க வேண்டும்என்றார் பொட்டம்மான்,….

பொட்டம்மானின் கதையை கேட்டதும் சந்திரமோகனும் மதிமுகராஜாவும் அதிர்ந்து விட்டனர். இருவரும் ஒரே நேரத்தில் ஒரே குரலில் எங்களுக்கு டக்ளசுடன் தொடர்பில்லை என்று கூறிவிட்டனர்.

இல்லை எங்களுக்கு தெரியும் நீங்கள் டக்ளசுடன் முன்னர் சம்பந்தப்பட்ட ஆட்கள். கொழும்புக்கு சென்று உடனடியாக பேசுங்கள் என்றார் பொட்டம்மான். அப்போது சந்திரமோகன் பொட்டம்மானிடம்  கேள்வி ஒன்றை கேட்டார்…

அந்த தகவல்களோடு மீண்டும் அடுத்த பதிவில்  சந்திப்போம்!……………

நன்றி – நக்கீரா முகநூல்.

உண்மைகள் தொடரும்…..!

Related posts: