196 கிராம அலுவலர்களுக்கான நியமனங்கள் வழங்கியபோதும் வடக்கில் தொடர்ந்தும் 89 பதவி வெற்றிடங்கள்!

Wednesday, June 6th, 2018

வடக்கு மாகாணத்தில் 285 கிராம அலுவலர்களுக்கு வெற்றிடம் உள்ளபோதும் தற்போது 196 கிராம அலுவலர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் 89 கிராம அலுவலர்களின் பதவி வெற்றிடமாகவே காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

கிராம அலுவலர்கள் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் 2016 ஆம் ஆண்டு விண்ணப்பம் கோரப்பட்டு அதற்கமைய 2017 ஆம் ஆண்டில் எழுத்துப் பரீட்சையும் இடம்பெற்றிருந்தது.

இருப்பினும் அவர்களுக்கான நேர்முகத் தேர்வு நீண்டகாலமாகவே இழுக்கப்பட்ட நிலையில் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நேர்முகத் தேர்வு இடம்பெற்றது. இதன் அடிப்படையில் தற்போது மாவட்ட ரீதியில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது 196 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் பிரகாரம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 99 வெற்றிடங்கள் உள்ள நிலையில் 77 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று மன்னார் மாவட்டத்தில் 42 வெற்றிடங்கள் உள்ள நிலையில் 28 பேருக்கு மட்டுமே நியமனம் கிடைத்துள்ளது. இவ்வாறே முல்லைத்தீவு மாவட்டத்தில் 74 வெற்றிடங்கள் உள்ள நிலையில் தற்போது 43 பேருக்கு நியமனம் கிடைத்துள்ளது.

இதேபோன்று வவுனியா மாவட்டத்தில் தற்போது 44 வெற்றிடம் உள்ளபோதும் 30 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 26 வெற்றிடங்கள் உள்ளபோதும் 18 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்டச் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது 285 கிராம அலுவலர் வெற்றிடங்களுக்காக 196 பேர் மட்டும் நியமனம் செய்யப்பட்டமையானது 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெறப்பட்ட ஆளணி வெற்றிடத்துக்கான நியமன அனுமதிக்கமைவானது.

அதற்கு பின்னரான தற்போது வெற்றிடத்துக்கு அலுவலர்கள் நியமனம் தொடர்பில் விரைவில் அமைச்சரவை அங்கீகாரத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவை அனுமதி கிடைத்தால் முழுமையான வெற்றிடத்துக்குரிய நியமனம் வழங்கப்படும் என அமைச்சால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts:


பலவீனமான நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதால் எவ்வித பயனும் ஏற்படாது - பிரதமர் மஹிந்த ராஜபஷ !
நிறைவேற்று அதிகாரமற்ற ஊழியர்களுக்கான சம்பளம் எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதி வழங்க நடவடிக்கை - இராஜாங...
மரண விசாரணைக்கு இலஞ்சம் வாங்கினரா வட்டுக்கோட்டை பொலிஸார் - ஜனாதிபதி செயலகத்துக்கு பாதிக்கப்பட்டவர் க...