விளையாட்டு பயிற்றுவிப்பாளருக்கு நியமனங்கள் இன்னமும் வழங்கவில்லை!

Saturday, October 27th, 2018

விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் தமக்கான நியமனங்கள் இன்னும் வழங்கப்படவில்லை என்று விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக வவுனியா மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களால் வவுனியா ஊடகமையத்தில்  நடத்தப்பட்ட ஊடகச் சந்திப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த வருடம் அகில இலங்கை ரீதியாக பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டு நேர்முகப் பரீட்சையும் உடற்தகுதி பரீட்சையும் நடத்தப்பட்டு அதனடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்களிற்கான பெயர் விபரம் கடந்த ஜீன் மாதம் 13 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் வவுனியாவில் இருந்தும் பலர் தெரிவுசெய்யப்பட்டனர். பின்னர் எமக்கான பாடசாலைகள் ஒதுக்கப்படுவதற்காக வடமாகாண கல்வித் திணைக்களத்தால் நாம் அழைக்கப்பட்டோம். எமக்கான பாடசாலைகளும் தெரிவு செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் நாம் முன்னர் பார்த்துக் கொண்டிருந்த வேலைகளிலிருந்து இடைவிலகினோம்.

எனினும் இன்றுவரை எமக்கான நியமனங்கள் கிடைக்கவில்லை. இதனால் எமது வாழ்வாதாரம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 3 ஆயிரத்து 850 பேர் இதற்காக தெரிவுசெய்யப்பட்டோம். எமக்கான நியமனங்கள் வழங்குவதில் மாகாணசபைகள் தடையாக இருப்பதாக கூறி இழுத்தடித்து வருகின்றது நல்லாட்சி அரசு. இதனால் மனரீதியாக பாதிக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக திட்டமிட முடியாத நிலையில் இருக்கிறோம். எனவே எமக்கான நியமனங்கள் இழுத்தடிக்காமல் உரிய தரப்பினர் மிக விரைவாக வழங்கி வைக்க வேண்டும் என கல்வி அமைச்சரிடம் நாம் கோரிக்கையை முன்வைக்கிறோம்.

 அத்துடன் எமக்கான நியமனம் தொடர்பாக அமைச்சரவை அனுமதி மிக விரைவாக பெறப்படும் என்று எமக்கு பலமுறை வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளபோதும் எமக்கான நியமன கடிதங்கள் இன்னும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அகில இலங்கை ரீதியில் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் அனைவரும் எதிர்வரும் 31 ஆம் திகதி கல்வி அமைச்சிற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கும் தீரமானித்துள்ளோம்.

எனவே இவற்றை கருத்திற்கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனங்களை மிகவிரைவாக வழங்கவேண்டும் என நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

Related posts:


இன்று இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை நாளாந்தம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் – இராணுவத் தளபதி த...
நாட்டில் கொரோனா தொற்றின் அதிகரிப்பை தற்போது கட்டுப்படுத்த முடியாது - சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பா...
மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்காக தனியான அடையாள அட்டை - தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெர...