ரயில்வே சீரமைப்புக்கு  புதிய திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவிப்பு !

Tuesday, May 9th, 2017


ஆசிய அபிவிருத்தி வங்கியின்  தலைவர் டூகிகோ நாகோவோ கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட போது இலங்கைக்கு கடன் வழங்குவதாக அறிவித்த 400 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை  இரட்டிப்பாக்கி 800மில்லியன் இந்த ஆண்டு வழங்கப் படும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தற்போது அறிவித்துள்ளது.

இலங்கையின் வருடாந்த ஒதுக்கீடு வருடத்திற்கு 400 மில்லியன் டொலர் ஆகும், இந்த ஆண்டு இது 800 மில்லியன் டொலர்களுக்கு அதிகரித்துள்ளது. நாம் வருடா வருடம் வழங்கும் கடன் தொகையில் இதுவே அதி கூடியதாகும் இவ்வாறு ஜப்பான், யோகோகாமாவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் 50 ஆவது  வருடாந்த மாநாட்டில் அதன் தெற்காசிய பிரிவின் பணிப்பாளர் ஹுன் கிம் தெரிவித்தார்.

தெற்காசிய பிராந்தியத்தில் முன்னெடுக் கப்படும் உட்கட்டமைப்பு திட்டங்களிற்கு   இலங்கை ஒரு சிறந்த உதாரணமாக விளங்குவதுடன்  அந்த நாடு முன்னேற்றம் அடைய  வேண்டிய கால கட்டத்தில் உள்ளதாகவும் அவர் அங்கே தெரிவித்தார்.

ஏற்கனவே தரமான உள்கட்டமைப்புத் திட்டங்களை முன்னெடுக்கும் இலங்கை  அதனை மேலும் மேம்படுத்தினால்  நாட்டின் பொருளாதாரத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை விரைவுபடுத்த முடியும்  என்றும் அவர் கூறினார்.

இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளில் போக்குவரத்து ஒரு பெரிய சவாலாக விளங்குகிறது. இதற்காக ஒரு பாரிய  ரயில் போக்கு வரத்து திட்டச் செயல்பாடுகளில்  ஆசிய அபிவிருத்தி வங்கியும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும்  அடுத்த ஆண்டு ஆரம்பிக்க திட்டமிடப் பட்டுள்ள  இந்த திட்டத்திற்கு  1 பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படும் எனவும் அவர் தெரவித்தார்.இந்த ரயில்வே திட்டத்தின் முதல் கட்டப் பணிகளுக்கு  300 மில்லியன் டாலர் செலவாகும் எனவும் தெரிவிக்கப் பட்டுளது.

மின்சார உற்பத்தியில் இலங்கையின் முயற்சிகளை பாராட்டிய ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் அரச  அதிகாரத்துவத்தின் நிலைப்பாடு தொடர்பில் கவலைகள் இருப்பதாகவும் இருந்தாலும்  எதிர்காலத்தில் புதுப்பிக்கத்தக்க செயல் திட்டங்களிற்கு  ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவு இலங்கைக்கு இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts: