யாழ்ப்பாண பிரதேச செயலகங்களில் சிற்றூழியர்களாக தென்னிலங்கை இளைஞர்களுக்கு ரகசிய நியமனம்?

Sunday, December 3rd, 2017

யாம்ப்பாணக் குடாநாட்டில் 30 ஆயிரம் இளைஞர்கள் வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு சிற்றூழியர்களாக தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் இரகசியமாக நியமனம் பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

யாழ்ப்பாண மாவட்டத்தின் மாவட்டச்செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் காணப்படும் சிற்றூழியர் வெற்றிடங்களுக்கு ஜி.சி.ஈ சாதாரண சித்தியுடன் நேரடியாகவே உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் நியமனம் வழங்க முடியும்.

அந்தந்த மாவட்டங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு உள்ளூரில் இருந்தே குறித்த நியமனம் வழங்கப்படுவது வழமையாகும்.

இதே நேரம் குறித்த வெற்றிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாது காணப்படும் நிலையில் தற்காலிகமாக நாள் சம்பள அடிப்படையில் சிற்றூழியர்களை மட்டும் மாவட்டசெயலர், அமைச்சின் அனுமதியுடன் பணிக்கமர்த்த முடியும். அதற்கமைய மாவட்டத்தில் காணப்படும் வெற்றிடங்களில் சில வெற்றிடங்களுக்கு மட்டும் ஒரு சிலர் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தற்காலிகமாக பணியாற்றுபவர்களையோ அல்லது வேலை வாய்ப்பு இன்றிக் காணப்படும் இளைஞர்களையோ கருத்தில் எடுக்காது ஊழியர்களை தென்னிலங்கையில் இருந்து இரகசியமான முறையில் நியமித்து வருகின்றனர். இவ்வாறு அண்மையில் மருதங்கேணி பிரதேச செயலகத்துக்கு ஒருவரும் மாவட்டச் செயலகத்துக்கு ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதே நேரம் கடந்த ஆண்டும் 6 பேர் இதே போன்று தென்னிலங்கை இளைஞர்கள் இரகசியமான முறையில் நியமிக்கப்பட்டனர்.

அதன் போதும் பலரும் சுட்டிக்காட்டிய நிலையிலும் எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: