யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டை பொலிஸாரே  ஊக்குவிக்கின்றனர் – பெண் சட்டத்தரணி மன்றில் சுட்டிக்காட்டு!

Saturday, November 3rd, 2018

யாழில் வாள்வெட்டு வன்முறைகளைப் பொலிஸாரே ஊக்குவிக்கின்றனர். சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்து தாங்களே வாள் ஒன்றை வைத்துவிட்டு அவரிடம் மீட்டதாக நீதிமன்றில் முற்படுத்துகின்றனர்.

இவ்வாறு யாழ் நீதிவான் நீதிமன்றில் எடுத்துரைத்தார் சட்டத்தரணி மேனகா ஜீவதர்சன்.

யாழ் – கொக்குவில் தொடருந்து நிலையத்துக்கு அருகில் ஓட்டோவின் ஆபத்தான சிறயரக வாள் ஒன்றை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாயைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஓட்டோச் சாரதியான சந்தேகநபர் நேற்று யாழ் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவரிடம் மீட்டதாகச் சிறிய ரக வாள் ஒன்றைப் பொலிஸார் மன்றில் சான்றுப் பொருளாகச் சமர்ப்பித்தனர்.

சந்தேகநபர் சார்பில் பெண் சட்டத்தரணி மேனகா ஜீவதர்ஷன் முன்னிலையானார்.

சந்தேகநபர் தனது ஓட்டோவை வாடகைக்கு அமர்த்திய 2 ஆண்கள், ஒரு பெண்ணை ரயில் நிலையத்தில் இறக்கிவிடச் சென்றார். அவரது ஓட்டோவில் பயணித்தவர்கள் ரயில் நிலையத்துக்கு அண்மையாக நின்ற பொலிஸாரைக் கண்டதும் ஓட்டம் எடுத்தனர்.

அவர்களில் ஆண்கள் இருவரையும் கைது செய்த பொலிஸார் ஓட்டோச் சாரதியான இந்தச் சந்தேகநபரையும் கைது செய்தனர். அவரைப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து வாள் ஒன்றை அவரிடம் மீட்டதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறைகளைப் பொலிஸாரே ஊக்குவிக்கின்றனர் என்று சட்டத்தரணி மேனகா ஜீவதர்ஷன் மன்றில் சமர்ப்பணம் செய்து சந்தேகநபர் சார்பில் பிணை விண்ணப்பம் செய்தார்.

சந்தேகநபரிடமிருந்து கைபேசி ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில் அவர் பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையில் வீதிச் சுற்றுக்காவலில் ஈடுபடும் ஒளிப்படங்கள் இருந்தன.

சந்தேகநபர் மானிப்பாய் பகுதியில் எடுத்த அந்தப் படங்களை வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு அனுப்பிப் பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் சோதனையில் ஈடுபடும் இடங்கள் தொடர்பில் அவர்களுக்குத் தகவல் வழங்கியுள்ளார் என்று பொலிஸார் கூறினர்.

இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், சந்தேகநபரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதேவேளை சந்தேக நபரால் ஓட்டோவில் ஏற்றிவந்து இறக்கிய இருவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் மன்றுக்கு அறிவித்தனர்.

Related posts:


இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு நூறுவீத உத்தரவாத தொகையை செலுத்த வேண்டும் - மத்திய வங்கி அத...
நள்ளிரவு முதல் பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு - இறக்குமதி செய்யப்படும் சிமெந்துக்கு விதிக்கப்படும...
2022-2023 கல்வியாண்டில் 45,000 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதி - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழ...