மீண்டும் சூடு பிடிக்கும் பிரமிட் மோசடி  – இளையோரை மூளைச்சலவை செய்யும் நிறுவனம் கண்டுகொள்ளாமல் இருக்கும் அதிகாரிகள்!

Sunday, June 3rd, 2018

வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் போருக்குப் பின்னர் கொழும்பை தலைமையகமாகக் கொண்ட தனியார் நிறுவனம் இலங்கையில் தடைசெய்யப்பட்ட சட்டவிரோதமான பிரமிட் வியாபாரத்தை முன்னெடுத்தது.

சுற்றுச் சூழலுக்கு இசைவான இலத்திரனியல் பொருள்களை விற்பனை செய்வதாகத் தெரிவித்து இளையோர் மத்தியில் பணத்தாசையை ஏற்படுத்தி பிரமிட் வியாபாரத்தை முன்னெடுத்திருந்தது.

இலங்கை மத்திய வங்கியின் தொடர் விழிப்புணர்வுப் பரப்புரை காரணமாக பிரமிட் வியாபார நடவடிக்கைகளை குறித்த தனியார் நிறுவனத்தால் முன்னெடுக்க முடியாமல் போயிருந்தது.

கடந்த ஆண்டுகளில் இடைக்கிடையே இந்த நடவடிக்கை தலைதூக்கியிருந்தாலும் முன்னரைப் போன்று வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட முடியவில்லை.

இந்த நிலையில் கடந்த 26 ஆம் திகதி யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் மேற்படி தனியார் நிறுவனம் செயலமர்வு என்று குறிப்பிட்டு அரச பணியாளர்களாகவும் பல்கலைக்கழக மாணவர்களாகவும் உள்ள இளையோரை அழைத்திருந்தது. சுமார் 30 பேர் வரையில் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தனர்.

தமது உற்பத்திகள் இயற்கைக்கு நட்புறவானது என்று தெரிவித்து ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருள்களைக் கொள்வனவு செய்ய வேண்டும். இதனூடாகத் தங்களது நிறுவனத்தின் பங்காளர்களாக அவர்கள் மாறுவார்கள் என்றும் அவ்வாறு இணையும் ஒவ்வொருவரும் மேலும் 4 பேரைச் சேர்த்து தமது நிறுவனத்தின் பொருள்களைக் கொள்வனவு செய்ய வேண்டும். இவ்வாறு மேலதிகமாக ஒவ்வொருவரையும் இணைக்கும் போது அவர்களை இணைப்பவருக்குப் பணம் கிடைக்கும். இதனூடாக தற்போதைய தொழில், கல்வி நடவடிக்கைக்கு மேலதிகமாக இலகுவாக வீட்டிலிருந்தே பணத்தைச் சம்பாதிக்கலாம் என்று கூட்டத்தில் கலந்துகொண்ட இளையோருக்கு முளைச்சலவை செய்யப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் சார்பில் அங்கு உரையாற்றியவர் தான் முன்னைய காலங்களில் பாடசாலை ஆசிரியர் எனவும் தற்போது அரச வேலையை விட்டு வெளியேறி இதனூடாகப் பெருமளவு பெருமளவு சம்பாதிப்பதாகக் குறிப்பிட்டார்.

மற்றொருவர் முன்னைய காலங்களில் அரச திணைக்களத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எனவும் தற்போது அரசவேலையை விட்டு வெளியேறி அதிகளவு பணம் உழைப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் பட்டங்கள் எத்தனை பெற்றாலும் பணம் சம்பாதித்தால் தான் வாழ்க்கை சிறப்பாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

பகிரங்கமாக பிரமிட் வியாபார நடவடிக்கையை ஊக்குவிக்கும் வகையில் குறித்த நிறுவனம் செயற்படத் தொடங்கியுள்ள நிலையில் அதிகாரிகள் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்படுகின்றது. ஒரே நிறுவனம் தொடர்ச்சியாக இத்தகைய சட்டவிரோத நடவடிக்கையைச் சீரான கால இடைவெளியில் முன்னெடுக்கின்றபோதும் அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

Related posts: